முகப்பு
சிறப்புச் செய்திகள்

ஆனந்தம்! 25 ஆண்டுக் கொண்டாட்டம்!

ஆனந்தம் படம் எதார்த்தத்தை மீறாத படைப்பு; வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சிறப்புப் பார்வை...

Updated On : 25 மே 2026, 9:41 am IST
ஆனந்தம் திரைப்பட போஸ்டர் - எக்ஸ்
பகிர்:

2001 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அனைத்து பத்திரிகைகளிலும் சொல்லிவைத்தாற்போல ஒரே மாதிரி பாராட்டுகளைப் பெற்ற படம் ஆனந்தம். அந்த ஆண்டு வெளியான எந்தவொரு இயக்குநரின் படத்துக்கும் கிடைக்காத அரவணைப்பு ஆனந்தம் படத்துக்குக் கிடைத்தது. காரணம், இப்படத்தின் அன்றைய அறிமுக இயக்குநர் என். லிங்குசாமியின் எதார்த்தத்தை மீறாத திரைக்கதை.

அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி பாராட்டிய ஒரே படம் என 75-வது நாளில் போஸ்டர் வெளியானது. ’’பண்டிகை நாள்கள் வந்தால் எங்கும் ஆனந்தம், வெற்றியை நோக்கி உழைப்பவருக்கு என்றும் ஆனந்தம்’’ என இப்படத்தின் தயாரிப்பாளர், சமீபத்தில் விபத்து ஒன்றில் மறைந்த ஆர்.பி. செளத்ரி சொன்ன வார்த்தைகளுடன் 175-வது நாள் போஸ்டர் வெளியானது.

பத்ரி, சிட்டிசன், தவசி, மின்னலே, நந்தா, ஆளவந்தான், டும் டும் டும் என அந்த ஆண்டில் வெளியான பெரிய நடிகரின் படங்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடியதே தவிர, ஆனந்தம் பெற்ற அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. நந்தா மட்டும் வெள்ளி விழா கண்டது.

Advertisement

Advertisement

சிட்டிசன் இயக்கிய சரவண சுப்பையா, மின்னலே இயக்கிய கெளதம் வாசுதேவ், தீனா இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் என மூவருக்குமே அது முதல் படம்தான். இப்படங்களை ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடக் கூடாது என்றாலும், ஆனந்தம் படத்தின் மூலம் குடும்ப ரசிகர்களை மட்டுமின்றி, இளைஞர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என அனைவரையும் கவர்ந்துவிட்டார் எனலாம்.

குடும்பக் கதை எல்லாம் நாடகத் தன்மை நிறைந்ததாகவே அதுவரையில் இருந்தன. ஆனால், ஆனந்தம் படத்தில் எதார்த்தத்தை மீறாத வகையிலான திரைக்கதையை லிங்குசாமி கையாண்டிருப்பார். விசு, வி. சேகர், விக்ரமன் போன்ற குடும்பக் கதைகளை அடுத்தடுத்து இயக்கி புகழ்பெற்ற இயக்குநர்களில் இருந்து லிங்குசாமி வேறுபட்டு நின்றது இங்குதான்.

பெண் பிள்ளை இல்லாத வீட்டில் அம்மாவின் வேலைகளை பகிர்ந்து செய்யும் மகன்கள். அவர்களுக்கு மளிகைக் கடையே தொழில். குடும்ப வறுமைக்காக காதலை விட்டுக்கொடுத்து தம்பிகளை ஆளாக்க நினைக்கும் அண்ணனாக மம்மூட்டி. அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் தம்பியாக முரளி. மது அருந்துவது, பின்னிரவு வீடு திரும்புவது என துடுக்குத்தனத்தோடு இருந்தாலும் குடும்ப பொறுப்போடு நடந்துகொள்ளும் இரு இளைய தம்பிகளாக அப்பாஸ், ஷ்யாம் கணேஷ்.

மகனுக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தும் அம்மாவாக ஸ்ரீவித்யா. சூழல் அறிந்து செயல்படத் தெரியாத அப்பாவியான உளறுவாய் அப்பாவாக டெல்லி கணேஷ்.

கணவர் காட்டும் கண் ஜாடைகளைப் புரிந்துகொண்டு குடும்ப சூழலை அனுசரித்து நடக்கும் மனைவியாக தேவயானி. அண்ணன், தம்பிகளோடு ஒப்பிடுகையில், ''கணவன் மட்டும் வேலைக்காரன் போல இருக்கிறாரே'' என்கிற இயல்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கறார் மனைவியாக ரம்பா. வீட்டில் திருட வந்து, வேலைக்காரனாக மாறும் பாவா லஷ்மணன். அரிசி வியாபாரியாக வரும் இளவரசு. காதலனுக்காக ஒற்றை ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கும் அழகான காதலியாக சினேகா. மகளுக்காக எந்தவொரு அதிரடி முடிவையும் எடுக்கும் அப்பாவாக விஜயகுமார். இப்படி அனைத்துப் பாத்திரங்களையும் நினைவில் கொள்ளும் அளவுக்கு வகைப்படுத்திக் காட்டியிருப்பார்.

படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் நாடகத்தன்மைக்கான சூழல்கள் அதிகம் இருந்தும் அதனை புறந்தள்ளி, நடிப்பிலும் வசனத்திலும் அளவாக காட்சிகளை அமைத்து எதார்த்த அளவுகோலை கையில் எடுத்துக்கொண்டார் லிங்குசாமி. எடுத்துக்காட்டாகப் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வான பிறகு வீட்டிற்கு வருகிறார் அப்பாஸ், பட்ட கஷ்டங்களை எடுத்துக்கூறி ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருக்க வேண்டிய இடத்தில் ஒரு கண்பார்வையைக் கொடுத்துவிட்டு, தம்பியை கட்டி அணைத்துக்கொள்வதோடு அந்தக் காட்சி முடியும்.

நிஜ வாழ்க்கையில் ஒரு வயதுக்குப் பிறகு பெரும்பாலான அண்ணன், தம்பிகள் அதிகம் பேசிக்கொள்ளாதவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்குள் இருக்கும் புரிதல் வார்த்தைகளின்றியே வெளிப்படும். உறவில் உள்ள இந்த நுண்ணிய உண்மையை மம்மூட்டி - முரளி காட்சிகளில் லாவகமாக வைத்திருப்பார்.

மச்சானின் பேச்சைக் கேட்டு சுவாமிமலையில் தனியாக கடை திறந்திருப்பார் முரளி. ஆனால் அது தன்னுடைய மச்சானிடமே கொடுத்துவிட்டு வந்திருப்பார். ''தனியாக சுவாமிமலையில் கடை திறந்ததை ஒரு வார்த்தை கேட்டிருப்போமா'' என தேவயானி கேட்க, அதற்கு தொண்டை அடைக்க கண்களில் கண்ணீரோடு பதில் அளிக்கும் முரளி ''சுவாமி மலையில் கடை திறந்த செய்தி என் அண்ணனுக்கு தெரியும். அதுபத்தி என்கிட்ட ஒருவார்த்த பேசியிருப்பாரா?, என்னைப் பத்தி என் அண்ணனுக்கு தெரியும். என் அண்ணன எனக்குத் தெரியும்'' என அந்தக் காட்சியையே முடித்திருப்பார்.

லிங்குசாமியின் இயல்பான கதை நகர்வுக்கு பிருந்தா சாரதியின் வசனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்ததால், தஞ்சாவூர் வட்டார வழக்குகளைப் புகுத்தி வசனங்களை எழுதியிருப்பார். பெரியவனே, சின்னவனே, கடை கன்னி, கைக்காட்டி விட்டீங்கன்னா போதும், இந்த வீட்டு மகராசி என தஞ்சாவூர் வழக்கு சொற்களை வைத்திருப்பார்.

தம்பிகளை ஆசிரமத்திலோ ஏதேனும் கடையிலோ விட்டுவிட்டு மம்மூட்டியை மட்டும் மருமகனாக அழைப்பார் அத்தை. வசனங்களால் பொங்கி எழவேண்டிய இடத்தில் ''நான் ஆசப்பட்ட பொண்ணோட அம்மான்றதால சும்மா விட்றேன்'' எனக் கூறியிருப்பார் மம்மூட்டி. இதே சூழல் அப்பாஸுக்கும் வரும். ''நான் ஆசப்பட்ட பொண்ணோட அப்பான்றதால சும்மா விட்றேன்'' என விஜயகுமாரிடம் அப்பாஸ் கூறியிருப்பார்.

வலிந்து திணிக்கப்படாத வகையில் ஒரே சூழலை இரு சகோதரர்களுக்கும் உருவாக்கிய திரைக்கதையை பாராட்டினால், அந்த இரு சூழலிலும் ஒரே மாதிரியான வசனத்தின் மூலம் நிறைவு செய்த வசனகர்த்தாவையும் பாராட்டியே ஆக வேண்டும். சினேகாவை அவரின் வீட்டில் இறக்கிவிட்ட பிறகு ''ஒரு சின்ன தேங்க்ஸ் கூட இல்லையா'' என அப்பாஸ் கேட்க, ''சின்ன தேங்க்ஸ்'' என மெல்லிய புன்னகையோடு கூறிவிட்டுச் செல்வார் சினேகா. அந்த இடத்தில் இருந்து இருவருக்குமான காதல் தொடங்கும். இப்படி நேர்த்தியான காதல் காட்சிக்கு கூட அளவான வசனங்களையே வைத்திருப்பார். ''நீ ஒரு சேமியா, எங்க அம்மா உனக்கு மாமியா'' என மளிகை சாமான்களை வைத்து எழுதப்பட்ட காதல் கடிதம், முகநூல், இன்ஸ்டாகிராம் இல்லாத அக்காலகட்டத்திலேயே படுவைரலானது. இன்று வரை அக்கவிதையின் நீட்சி வெவ்வேறு வகைகளில் தொடர்கிறது.

வீட்டில் திருடன் புகும் காட்சி, அவனையே வேலைக்காரனாக்கிக் கொள்ளும் காட்சி, முதலிரவில் தேவையானியிடம் மம்மூட்டி பேசிக்கொண்டிருக்கும்போது ''கதவு தாழ்ப்பாள் போடல'' என தேவயானி சன்னமாகக் கூறும் காட்சி என எதார்த்தம் மீறாமல் நகைச்சுவை காட்சிகளை லிங்குசாமி வடித்திருப்பார்.

வீடுகளில் அண்ணன் சட்டையை தம்பி போட்டுக்கொள்வது இயல்பானது. அதையும் ஒரு காட்சியில் வைத்து, நிஜ வாழ்வின் அனுபவங்களைப் புகுத்தியிருப்பார். அப்பாஸின் சட்டையை போட்டுக்கொண்டு கோயிலில் திரும்பி நின்றுகொண்டிருப்பார் ஷ்யாம் கணேஷ். வெளியூர் சென்றிருந்த அப்பாஸ் திரும்பி வந்துவிட்டதாக எண்ணி அவரை கட்டியணைக்க ஓடுவார் சினேகா. ஆனால், அது தன் காதலனில்லை எனத் தெரிந்து அசெளகரியத்தையும் ஏமாற்றத்தையும் ஒருசேர தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார் சினேகா. பல்லாங் குழியில் வட்டம் பார்த்தேன்... பாடலில் காதலன் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு சினேகா கொடுத்த முகபாவனைகளை யாரும் மறந்திருக்க மாட்டோம். அத்தனை அழகு.

பொருந்தாத இடத்தில் பாடல் வருகிறது என்று, பல்லாங்குழி பாடலை எடுத்துவிட படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால் ஹைக்கூ விரும்பியான லிங்குசாமி, யுகபாரதியின் மேல் வைத்த நம்பிக்கைக்காக பல்லாங்குழி பாடல் படத்தில் இடம்பெற்றதாக அப்போது கூறப்பட்டது. நல்ல வேளை. இன்று இப்படத்தின் அடையாளமே பல்லாங்குழி பாடல்தான்.

“குழந்தை பாக்கியம் இல்லாதவ, தானா முன்ன நின்னு எல்லா வேலையையும் செய்யுறதா?” எனக் கேள்வி கேட்கும்போது முகம் சிவந்து கூனி குருகி அழுதுகொண்டு தேவயானி வெளியேறும்போது ஆழமான நடிப்பையும், மலடி என்ற பட்டத்தோடு கணவரைப் பார்க்கும்போதும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருப்பார் தேவையானி.

தேவயானி பாத்திரம் குணவதியாக சினிமாத்தனமாக இருந்தாலும், ரம்பா பாத்திரம் எதார்த்தமாக பலர் வீட்டில் இருக்கும் மருமகள்களைப் போன்று வடித்திருப்பார் இயக்குநர். வீட்டில் பேங்க் பாஸ்புக் வைத்து பிரச்னை செய்யும்போதும், ''அதான் வார்த்தைனு வந்துடுச்சுல, என்னனு சொல்லிட்றது'' என குண்டூசியால் குத்துவதைப்போல பேசி, இயல்பான மருமகளாக ரம்பா நடித்திருப்பார்.

பாஸ்புக்கில் மம்மூட்டி பணம் போட்டு வைத்திருப்பது முரளியின் குழந்தையின் மருத்துவ செலவுக்காக என்று தெரிந்ததும், ''என்னை உளறு வாய்னு சொல்லிட்டு நீங்க எல்லாரும் உளறிட்டீங்களேடா..'' என்று அழும்போது தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருப்பார் டெல்லி கணேஷ்.

ஸ்ரீவித்யா பல படங்களில் அம்மா பாத்திரங்களை ஏற்றிருந்தாலும், ரெங்கநாயகியாக நான்கு மகன்களைப் பெற்ற அம்மாவாக எல்லோர் மனதிலும் நின்றிருப்பார். இரு மருமகள்களின் முரண்களை சரி செய்வது, மகன்களுக்குள் ஏற்படும் மனக்கசப்புகளை பெரிதாக்காமல் பார்த்துகொள்வது, உளறுவாய் கணவரை அடக்கி வைப்பது, வெளியூர் சென்று திரும்பிய மகனிடம் வீட்டில் நடந்த கதைகளை துணி துவைத்துக்கொண்டே சொல்வது என அம்மாவாகவே வாழ்ந்திருப்பார்.

முரளியின் பாத்திரம் தனித்துவமாக செதுக்கப்பட்டிருக்கும். மற்ற மூன்று சகோதரர்களில் இருந்து மாறுபட்டவராக இருப்பார் முரளி. உடையிலும் சரி, நிறத்திலும் சரி வேறு ஆளாகவே இருப்பார். ஒரு வீட்டில் உள்ள சகோதரர்களில் இத்தகைய முரண்கள் இருப்பது இயல்பானது. நான்கு சகோதரர்களை ஒன்றாக நிற்கவைத்தால், ஒருவர் அந்த வீட்டிற்கே தொடர்பில்லாதவர் போல தெரிவார். அத்தகைய பாத்திரம்தான் முரளியுடையது. ’’யாரும் சும்மா சும்மா பீரோல இருந்து பணம் எடுக்க வேணாம்’’ என மம்மூட்டி கூறியதும், மனம் உடைந்து எடுத்த பணத்தை போட்டுவிட்டு திரும்பும்போது முரளியின் நடிப்பில் எதார்த்தமான ஏமாற்றம் நிரம்பியிருக்கும்.

திருமணமான புதிதில் மனைவி வெள்ளை வேட்டி, சட்டையுடன் நகைகளை மாட்டிவிடும்போது அதனை விரும்பாத மளிகைக் கடைக்காரனாகவும் வீட்டார் கேலி செய்யும்போது கொடுக்கும் பாவனைகளுமாக அக்காட்சியை முரளி பூரணமாக்கியிருப்பார்.

பக்குவம் நிறைந்த மூத்த அண்ணனாக மம்மூட்டியை தவிர வேறு யாரையும் திருப்பதி பாத்திரத்தில் பொருத்திப் பார்க்க முடியாது. இரு மருமகள்களிடையே சண்டை எழுந்து வீடே கலவரமாகியிருக்கும்போது கை சைகை மூலம் அனைவரையும் உள்ளே போகச்சொல்லும் லாவகமான நடிப்பு தனித்துவமானது. என்ன பேசினாலும் அங்கு சண்டை பெரிதாக மாறும் என்பதால், வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தாமல் ''வீட்டுக்கு பால் எடுத்து வெக்காம என்னத்தட விக்கப்போறீங்க'' என அதட்டி பிரச்னையை முடிப்பார்.

பெண் பார்க்கப்போகும்போது இருபதுகளின் துடிப்பையும், கடையை இடித்துவிட்ட பிறகு, கல்யாணம் நின்றுபோன ஏமாற்றத்தால் உருவான வைராக்கியத்தையும் தனது நடிப்பில் வேறுபடுத்திக் காட்டியிருப்பார் மம்மூட்டி.

திருப்பதி பிரதர்ஸ் என்ற குடும்பத்தின் கதையை தன் குடும்பத்தில் இருந்தே லிங்குசாமி எடுத்து திரைக்கதையை உருவாக்கியிருந்ததால், உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே ஆனந்தம் படம் அமைந்தது. நான்கு சகோதரர்கள் பற்றிய படம் என்பதால், இப்படத்திற்கு முந்தைய ஆண்டு வெளியான வானத்தைப்போல படத்தின் சாயல் இருப்பதற்கு எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையும், ஆர்.பி. செளத்ரியும் ஒரு காரணமாக இருக்கலாம். விக்ரமனின் உதவி இயக்குநராக இருந்தாலும் லிங்குசாமியின் ஆனந்தத்தில், வானத்தைப்போல படத்தைப்போன்ற நாடகத்தன்மை இல்லை.

கும்பகோணம், குடவாசல், சந்தை, ஆற்றங்கரை, பாலம் என மண் சார்ந்து ஆனந்தம் படம் பயணித்ததில் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவுக்கு முக்கிய பங்கு உண்டு. பாரம்பரிய வீடு, அதன் அலமாரி, வீட்டில் எப்போதும் இருக்கும் மளிகை சாமான்கள் என வியாபாரியின் வீடு என்பதை இவரின் கேமரா காட்டிக்கொண்டே இருந்தது. பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் கோயில்களிலும், ஆற்றங் கரையிலுமே படமாக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகு.

மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே என ஸ்ரீவித்யா வேண்டிக்கொள்வதாக பெருமாள் கோயிலில் தொடங்கும் படம், முதல் இரு மகன்களைத் தொடர்ந்து, மூன்றாவது மகனுக்கும் அதே கோயிலில் திருமணம் நடப்பதோடு முடியும்.

2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆனால், இன்றைய சகோதரர்களுக்கும் பொருந்துகின்ற தன்மையிலேயே இப்படம் உள்ளது என்பதே இதன் சிறப்பு. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால் சமுத்திரம், பாண்டவர் பூமி, தென்காசிப்பட்டணம் என இதே பாணியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. ஆனால், ஆனந்தம் எடுத்த லிங்குசாமியோ அடுத்தடுத்து ரன், சண்டக்கோழி, ஜீ, பையா என கமர்ஷியல் நோக்கிச் சென்றது ஒருவகை ஏமாற்றம்தான் அளிக்கிறது.

ஆனந்தம் படத்துக்காக எழுதி நீக்கிய காட்சிகளைக் கொண்டு ஒரு இணையத் தொடரையே எடுக்கலாம் என்றும் நேரம் கிடைக்கும்போது ஆனந்தம் படத்தின் முந்தைய பாகத்தை இயக்க விருப்பம் உள்ளதாக இயக்குநர் லிங்குசாமி ஒரு நேர்காணலில் தனது கூறியிருக்கிறார்.

சண்டை, ரத்தம், துப்பாக்கிகள் என ஆக்‌ஷன் படங்களே வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் ஆனந்தம் படத்தின் முந்தைய பாகம் வெளியானால், பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனந்தம் படம் ஒரு வலுவான படைப்பு என்பதை இக்கால 2கே இளைஞர்களும் உணர்வார்கள். யூடியூபிலேயே ஆனந்தம் உள்ளது. இலவசமாகவே பார்க்கலாம்.

summary

N lingusamy's Aanandham movie compteded 25th year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.