முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு சார்பு கோயில்களுக்கு 4 இடங்களில் யாகசாலைகள் அமைப்பு:  நாளை பூஜை தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலின் சார்பு கோயில்கள் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை (

Updated On : 24 ஜனவரி 2019, 1:29 am IST
பகிர்:

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலின் சார்பு கோயில்கள் குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை (ஜன. 25) தொடங்குகிறது. 4 இடங்களில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 11 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் சார்புக் கோயில்களாக விளங்கும் ஸ்ரீ சன்னிதி விநாயகர், ஆக்னேய, கன்னிமூலை, வாயு, ஈசானிய மூலையில் மைந்திருக்கும் விநாயகர், நளன் தீர்த்தக் குளம் அருகே அமைந்திருக்கும் நளன் கலிதீர்த்த விநாயகர், கிராம தெய்வங்களாகிய ஸ்ரீ பாலசாஸ்தா (ஐயனார்), ஸ்ரீ சப்த மாதா பீடாபஹாரி (பிடாரி), ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆகிய 9 கோயில்களுக்கான குடமுழுக்கு விழா ஜன. 27 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.45 மணியிலிருந்து 11.10 மணிக்குள் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. இதற்காக மாரியம்மன் கோயில், பிடாரி, ஐயனார் கோயில் மற்றும் தேரடி அருகே பிற கோயில்களுக்கான யாகசாலை என 4 இடங்களில் யாகசாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கலசங்கள் வைத்து பூஜை செய்யும் வகையில் மேடை அமைத்தல், யாகசாலை குண்டம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், யாகசாலை மண்டபத்தை அழகுப்படுத்தும் பணிகளும், விளக்குகள் அமைக்கும் பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. யாகசாலை பூஜையையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை வியாழக்கிழமை (ஜன. 24) காலை 8 மணிக்கு மேல் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் கால பூஜை தொடங்குகிறது. சனிக்கிழமை காலை, இரவு முறையே 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணிக்கு மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடத்தப்பட்டு 8.40 மணிக்கு கும்ப மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று 8.45 மணிக்கு மேல் ஒவ்வொரு கோயில்களாக குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. 
சார்பு கோயில்களுக்கான குடமுழுக்கு முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.