காரைக்கால்

மண் வளம் பெருக மரங்கள் வளர்ப்பது அவசியம்: ஜக்கி வாசுதேவ்

DIN


மண் வளத்தைப் பெருக்க, மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும் என ஈசா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.
தென்னிந்தியாவின்  உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டும் வகையில், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை அவர் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை  அதிகரிப்பதற்காக தலைக்காவிரி முதல் திருவாரூர் வரை அவர் இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 கடந்த  3-ஆம் தேதி தலைக்காவிரியிலிருந்து புறப்பட்ட அவர் மைசூரு, பெங்களூரு, ஒசூர், தருமபுரி, ஈரோடு,  திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வழியாக திருவாரூருக்கு சனிக்கிழமை வந்தார். திருவாரூரில் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்று அவர் பேசியது:
 தென்னிந்தியாவில்  12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். உலகில் வேறெங்கும் இத்தகைய வரலாறு  கிடையாது. இந்த கலாசாரமே விவசாயத்தால்தான் வளர்ந்தது. இந்த கலாசாரம் அரசர்களாலோ,  படித்தவர்களாலோ வளரவில்லை. ஆனால், கடந்த இரண்டு தலைமுறைகளில் வளமான மண்ணைப் பாலைவனமாக்கும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
  மண் வளமாக இருக்க, மரங்களின் இலைகள் தேவை. ஆடு, மாடுகளின்  சாணம் தேவை. இந்த இரண்டையும் எடுத்துவிட்டு வெறும் ரசாயன உரங்களை இட்டு, வளமான மண்ணை, மணலாக மாற்றி வருகிறோம். மண்ணும், நீரும் இல்லாத  நாடு, நாடே கிடையாது.
  ஆறு, ஏரி, குளம் ஆகியவை நீருக்கு ஆதாரம் அல்ல. நம் நாட்டில் மழை மட்டும் தான்  நீருக்கு ஆதாரம். மழையை பூமியில் சேர்க்க வேண்டும். இதற்கு மரங்கள் தேவை. காவிரி நடந்து வந்தால் தான்  வளம். ஓடி வந்தால் வெள்ளம். மண் வளம் பெருக வேண்டுமெனில் மரங்கள் அதிகமாக இருக்க வேண்டும். 
இதற்கு தீர்வு காண 85 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்ட காவிரியில்  3-இல் ஒரு பங்கு வேளாண் காடாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். மர விவசாயத்தை பல விதமாக நாம் செய்ய  முடியும். முழு நிலங்களில் மரம் வளர்க்கலாம். பாதி நிலங்களில் வளர்க்கலாம். 
மரங்களும், மாடுகளும் இருந்தால்தான் மண்ணுக்கு சத்து கிடைக்கும். மண் சத்தாக இருந்தால் தான் உணவு சத்தாக  இருக்கும். உணவு சத்தாக இருந்தால்தான், மனிதர்கள் சத்தாக இருக்க முடியும். எனவே, அனைவரும் முடிந்த  அளவு மரம் வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் செயலாளர் காவிரி ரெங்கநாதன்,  அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின்  தலைவர் காவிரி தனபாலன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சேதுராமன், வேலுடையார் கல்விக்குழுமத் தலைவர் தியாகபாரி, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜன், மதர் இந்தியா பள்ளித் தாளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட
பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் ஜக்கி வாசுதேவ்
காவிரி கூக்குரல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ்  மயிலாடுதுறைக்கு சனிக்கிழமை வருகை தந்தார். 
மாயூரநாதர் கோயிலுக்கு ஜக்கி வாசுதேவ் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால், அவரை காண ஏராளமானோர் கோயிலின் முன்பு கூடியிருந்தனர்.இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஜக்கி வாசுதேவ், தனது தலைக்கவசத்தைக்கூட கழற்றாமலும், இருசக்கர வாகனத்தை விட்டு இறங்காமலும், சில நிமிடங்கள் மட்டும் வாகனத்தில் அமர்ந்தவாறு சாலையிலேயே நின்றார். அவருக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், பல மணி நேரமாக அவரை காண காத்திருந்த அவரது சீடர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஆன்மிக குருவாக விளங்கும் ஜக்கி வாசுதேவ் அவரது சீடர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசாமல் போனது அவர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT