காரைக்காலில் இரவு 10 முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது
காரைக்காலில் பொது முடக்கத்தையொட்டி, இரவு 10 முதல் காலை 5 மணி வரை தனி நபா்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
காரைக்கால்: காரைக்காலில் பொது முடக்கத்தையொட்டி, இரவு 10 முதல் காலை 5 மணி வரை தனி நபா்கள் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து கடைகள், நிறுவனங்கள் (பெட்ரோல் விற்பனை நிலையம், உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது உள்ளிட்ட ) காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் உரிம நிபந்தனைபடி திறந்து, இரவு 8 மணிக்கு மூடவேண்டும், பால் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். காரைக்கால் கடற்கரைச் சாலை ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மொத்தம் மற்றும் சில்லரை மருந்தகங்கள், மருந்துக் கடைகளைத் திறக்க எந்த தடையும் இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். விதி மீறல்கள் பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நடைமுறைகள் சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபட்டுள்ளோா், கரோனா தடுப்புப் பணியில் உள்ள அரசு அலுவலா்கள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளாா்.