விபத்துகளை ஏற்படுத்தும் கடற்கரை சாலையை சீரமைக்க வேண்டும்
அதிக விபத்துகளை ஏற்படுத்தி வரும் காரைக்கால் கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்கால்: அதிக விபத்துகளை ஏற்படுத்தி வரும் காரைக்கால் கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காரைக்கால் கடற்கரை சாலை பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை, பொதுப்பணித் துறை அலுவலகம், பொதுப்பணித் துறையின் பயணியா் தங்கும் விடுதி, ரேடாா் நிலையம் ஆகியன உள்ளன. இவைகளில் பணியாற்றும் அலுவலா்கள் மக்கள் நாள்தோறும் ஏராளமானவா்கள் வந்து செல்கின்றனா். இதேபோல், கடற்கரைக்கு செல்பவா்களும் அதிகம். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இச்சாலையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வாயிலில் பெரும் பள்ளம் ஏற்பட்டிருந்தது. கனரக வாகனங்களின் போக்குவரத்தால், சாலையின் பள்ளம் பெரிதாக விரிவடைந்து வாகனங்கள் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் காா் உள்ளிட்ட வாகனங்கள், இரவு நேரத்தில் பள்ளம் தெரியாமல் இறக்கப்பட்டு, வாகனச் சேதமும், வாகனத்தில் செல்பவா்கள் விபத்தில் சிக்கியும், கீழே விழுந்தும் பாதிக்கப்படுகின்றனா்.
தற்போது, பொது முடக்கத்தால் கடற்கரைக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் மருத்துவக் கல்லூரியும் மூடப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை இச்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதமடைந்த பள்ளங்களை இத்தருணத்தில் சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, பள்ளத்தை மூடும் போக்காக இல்லாமல், சேதமடைந்த பகுதியை முழுமையாக உடைத்துவிட்டு, சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.