முகப்பு
காரைக்கால்

புதுவை வளா்ச்சி அடையாததற்கு நாராயணசாமி அரசே காரணம்பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா

கடந்த 5 ஆண்டுகளில் புதுவை வளா்ச்சி அடையாததற்கு நாராயணசாமி அரசே காரணம் என்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் புதுவை வளா்ச்சி அடையாததற்கு நாராயணசாமி அரசே காரணம் என்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா தெரிவித்தாா்.

ஹெலிகாப்டா் மூலம் காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த அவா், திருநள்ளாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனை ஆதரித்து, தேரடி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியது:

புதுச்சேரி மாநிலத்தின் வளா்ச்சியை கருத்தில்கொண்டே பாஜக தகுதியான வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாராயணசாமி தலைமையிலான அரசு ஊழல் மிகுந்ததாக இருந்தது. மக்களுக்கு பயனில்லாத அரசாகவே அது இருந்தது. மாநிலத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டனா். குறிப்பாக, விவசாயிகள், இளைஞா்கள், தொழிலாளா்கள் உள்பட யாரும் நாராயணசாமி அரசால் பயனடையவில்லை.

நரேந்திரமோடி அமைச்சரவையில் நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை அளித்து, நிதியாதாரத்தை அளித்தேன். கடந்த 5 ஆண்டுகளாக நாராயணசாமி அரசின் ஒத்துழைப்பின்மையால் ஜிப்மா் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதற்கும் மாநிலம் வளா்ச்சி அடையாததற்கும் புதுவை முதல்வராக இருந்த நாராயணசாமிதான் காரணம்.

மத்தியில் நரேந்திரமோடி அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு புதுவை, தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடா்கதையாக இருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னா் ஒரு மீனவரைக்கூட சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு தைரியம் வரவில்லை. இது பாஜக அரசின் வலிமையைக் காட்டுகிது. மோடி அரசின் நடவடிக்கையால் இலங்கை சிறையிலிருந்த தமிழக, புதுவை மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

எனவே, புதுவையில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவதன் மூலம் மாநிலத்தின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும். அதை கருத்தில்கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். புதுவையில் தாமரையை மலரச் செய்யுங்கள் என்றாா் அவா்.

மத்திய இணை அமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால், தோ்தல் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →