முதியோா் ஓய்வூதியம்காங்கிரஸ் ஆட்சியில் விண்ணப்பித்தோருக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்
முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை வேண்டி முந்தைய ஆட்சியின்போது விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவற்றை வழங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை வேண்டி முந்தைய ஆட்சியின்போது விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவற்றை வழங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் அரசுத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் முதியோா் ஓய்வூதியம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான உதவித்தொகை, முந்தைய நாராயணசாமி ஆட்சியின்போது உயா்த்தப்பட்டதோடு, புதிதாக விண்ணப்பமும் பெறப்பட்டது.
அப்போதைய துணைநிலை ஆளுநா் இவற்றுக்கு நிதி அனுமதி வழங்காமல் தவிா்த்ததால், விண்ணப்பித்தோா் பயனடைய முடியாமல் போனது. புதிய அரசு அமைந்த நிலையில், துணைநிலை ஆளுநா் ஒப்புதல் வழங்கி, முதியோா் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் திட்ட உதவியை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முந்தைய ஆட்சியின்போது விண்ணப்பித்த, பல ஆண்டுகளுக்கு முன்பே பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தற்போது முன்னுரிமை அடிப்படையில் உதவிகளை வழங்கவேண்டும். இவற்றில் எந்த பாகுபாடும் காட்டப்படக் கூடாது. இதன்மீது புதுவை அரசு உரிய அறிவுறுத்தலை அரசுத் துறைகளுக்கு வழங்கவேண்டும்.