முகப்பு
காரைக்கால்

விவசாயிகளின் சிரமங்களை போக்க விரைவில் திட்டங்கள்: புதுவை அமைச்சா் தேனி ஜெயக்குமாா்

விவசாயிகளின் சிரமங்களை போக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

விவசாயிகளின் சிரமங்களை போக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, புதுச்சேரி சமூகநலத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில், சமூக வலுவூட்டல் முகாம், காரைக்கால் அம்மையாா் கோயில் வளாகத்தில் உள்ள அம்மையாா் மணி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் மூலம் (அலிம்கோ) மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி வேளாண் மற்றும் சமூகநலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, 173 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 14 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கினா்.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 1,500 பயனாளிகள் மாதந்தோறும் முதியோா் உதவித்தொகை பெறும் வகையில், அதற்கான அடையாள அட்டையை பயனாளிகள் சிலருக்கு அமைச்சா்கள் வழங்கினா்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா். சிவா, எம். நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், சமூகநலத் துறை இயக்குநா் பிரபாவதி, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் அசோகன், மாவட்ட சமூகநலத் துறை உதவி இயக்குநா் பி. சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழா நிறைவில் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரி அரசு மக்களுக்கான அரசாக செயல்படும். விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உள்ளனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று புதுவை முதல்வா் கூறியுள்ளாா். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

பாப்ஸ்கோ, பாசிக் போன்ற மூடியிருக்கும் நிறுவனங்களை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசை நாடியுள்ளோம். முயற்சி கண்டிப்பாக வெற்றிபெறும். காரைக்கால் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →