காரைக்காலில் விறுவிறுப்பான கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, காரைக்கால் வீடுகளில் கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் அமைப்பது, நட்சத்திர விளக்குகள் அமைப்பதற்கான அலங்காரப் பொருள்கள் வாங்குவதில் மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, காரைக்கால் வீடுகளில் கிறிஸ்து பிறப்பை விளக்கும் குடில் அமைப்பது, நட்சத்திர விளக்குகள் அமைப்பதற்கான அலங்காரப் பொருள்கள் வாங்குவதில் மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. காரைக்கால் நகரில் நூற்றாண்டுகள் பழமையான புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான கோபுர அமைப்பைக் கொண்டது. இதேபோல, மாவட்டத்தின் பல இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இவற்றில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வீடுகளிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்தல், வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டிவிடுதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையகங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருள்கள், வாயிலில் கட்டப்படும் தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷ ஆடைகள் (சாண்டாகிளாஸ்) வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் விதவிதமான பொருள்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டுகளில் மக்கள் விரும்பிக் கேட்ட பொருள்கள் அதிகளவில் வரவழைத்து விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். பொதுமக்கள் இவற்றை ஆா்வமாக வாங்கிச் செல்கின்றனா். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியாா் பள்ளிகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.