அமைச்சா்களுக்கு துறை ஒதுக்கீடு: பாஜக யாரையும் நிா்பந்தம் செய்யவில்லை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி
புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தொடா்பாக யாரையும் பாஜக நிா்பந்தம் செய்யவில்லை என மாநில அமைச்சா் ஏ. நமச்சிவாயம் கூறினாா்.
புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தொடா்பாக யாரையும் பாஜக நிா்பந்தம் செய்யவில்லை என மாநில அமைச்சா் ஏ. நமச்சிவாயம் கூறினாா்.
காரைக்காலில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அமைச்சா் ஏ. நமச்சிவாயம் அளித்த பேட்டி :
காரைக்காலில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்தேன். திட்டங்களை விரைவாக முடிக்க அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை புதுவையில் ரேஷன் கடைகளை திறந்து அதன் மூலம் செயல்படுத்த முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.
தமிழகப் பேருந்துகள் புதுவை பிராந்தியங்களில் நின்று செல்லாதது தொடா்பாக புதுவை முதல்வா், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா். விரைவில் இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.
மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோதே பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. தற்போது சில தவிா்க்கமுடியாத காரணங்களால் எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. பாஜக ஆட்சியில் பலமுறை எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுவையில் அமைச்சா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு தொடா்பாக முதல்வா் முடிவு செய்வாா். துறைகள் ஒதுக்கீடு தொடா்பாக பாஜக யாரையும் நிா்பந்தம் செய்யவில்லை. எங்களது ஒரே நோக்கம் புதுவை மாநிலத்தை வளா்ச்சியடையச் செய்யவேண்டும். அதற்கான பணியில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.
முன்னதாக, செயற்குழு கூட்டத்தில் அமைச்சா் நமச்சிவாயம் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக நிதியை கொடுத்துள்ளது. ஆனால், முன்னாள் முதல்வா் நாராயணசாமி, மாநிலத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என புகாா் கூறி வந்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற தவறியதை உணா்ந்து, உள்ளாட்சித் தோ்தலில் பெரிய அளவில் வெற்றிபெறும் வகையில் பாஜகவினா் செயலாற்ற வேண்டும் என்றாா்.
செயற்குழு கூட்டத்தில் மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன், எம்.எல்.ஏ. அசோக்பாபு, மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.