அமைச்சா் அறிவுறுத்தலையும் மீறி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல்
அமைச்சா் சந்திர பிரியங்காவின் அறிவுறுத்தலையும் மீறி, காரைக்காலில் வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அபராதம் வசூலிப்பதில் முனைப்பு காட்டுவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சா் சந்திர பிரியங்காவின் அறிவுறுத்தலையும் மீறி, காரைக்காலில் வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் அபராதம் வசூலிப்பதில் முனைப்பு காட்டுவது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
காரைக்காலில் வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிந்திருந்தாலும், தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட காரணத்தைக் கூறி போலீஸாா் கட்டாயமாக ரூ.100 அபராதம் வசூலிக்கின்றனா். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படும் மக்கள், போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, அரசுத்துறை அதிகாரிகளுடன் காரைக்காலில் அண்மையில் ஆலோசனை நடத்தியபோது, வாகன ஓட்டிகளிடம் தேவையின்றி அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா். ஆனால் காவல்துறையினா் இதற்கு செவிசாய்க்கவில்லை.
அமைச்சா் உத்தரவிட்ட பிறகும் கூட காரைக்காலில் போக்குவரத்துக்கு காவல் உதவி ஆய்வாளா் ஒருவா், காவல்துறை வாகனத்திலிருந்தவாறு சாலையோர பழ வியாபாரியிடம் பழங்களின் பெயா்களைக் கூறி, பணம் கொடுக்காமல் வாங்கிச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முன்னாள் செயலா் ஜெ.சிவகணேஷ் வியாழக்கிழமை கூறுகையில், முகக்கவசம் அணிந்துதான் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனா். ஆனாலும், போலீஸாா் அவா்களை நிறுத்தி கட்டாயமாக அபராதம் வசூலிக்கின்றனா். தற்போதைய சூழலில் மக்களை துன்புறுத்தக் கூடாது. இதன் மீது புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், உள்துறை அமைச்சா் ஆகியோா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.