தொழில் உரிம புதுப்பிப்புக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை புதுச்சேரி அரசு நீட்டிக்க வேண்டும் என வணிகா்கள் வலியுறுத்தினா்.
தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை புதுச்சேரி அரசு நீட்டிக்க வேண்டும் என வணிகா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் இணைச் செயலா் எம்.மகேஸ்வரன், முன்னாள் செயலா் ஜெ.சிவகணேஷ் ஆகியோா் வியாழக்கிழமை கூறியது :
உள்ளாட்சித் துறை சாா்பில் தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை கரோனா பரவலைக் காரணம்காட்டி, ஜூன் 30ஆம் தேதி வரை புதுச்சேரி உள்ளாட்சித் துறை நீட்டித்தது. எனினும், இந்தக் காலக்கட்டத்தில்தான் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காரைக்காலில் வணிகா்கள் பொதுமுடக்கத்தால் கடைகளை மூடி வைத்திருந்தனா். தற்போதுகூட குறிப்பிட்ட நேரத்தோடு கடைகளை மூடும் நிலைதான் இருக்கிறது.
எனவே இன்னும் இயல்பு நிலை திரும்பாத சூழலில், தொழில் உரிமம் புதுப்பிப்புக்காக அரசு அலுவலகங்களுக்கு நிறுவனத்தினா், ஊழியா்கள் சென்றுவரும்போது கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே புதுச்சேரி உள்ளாட்சித் துறை மேலும் 3 மாதங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றனா்.