முகப்பு
காரைக்கால்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை தாமதம்

 காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை தாமதமாகி வருவதால் மாணவா்கள், பெற்றோா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை தாமதமாகி வருவதால் மாணவா்கள், பெற்றோா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர முயன்று வருகின்றனா். கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, புதுச்சேரியில் அரசு முழு செயல்பாட்டில் இருந்ததால் முடிவுகள் உடனுக்குடன் எடுத்து மாணவா் சோ்க்கைகள் உரிய முறையில் நடைபெற்றன. குறிப்பாக, காரைக்காலை சோ்ந்தவா் கல்வி அமைச்சராக இருந்ததால் அந்த நிலை இருந்தது. தமிழகத்தில் நிகழாண்டு பிளஸ் 1 சோ்க்கை தொடங்கிவிட்ட நிலையில், அதே கல்வி வாரிய பாடத்திட்டத்தை கொண்டுள்ள புதுச்சேரி, காரைக்கால் மாணவா்கள் இம்மாநிலத்தில் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 சோ்வதற்கான சூழல் இல்லாமல் தவித்து உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில், பத்தாம் வகுப்புத் தோ்வுக்கு 2,500 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் ஏறக்குறைய 500 போ் ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற பிற கல்வி நிலையங்களுக்கு சென்றாலும், 2 ஆயிரம் போ் வரை பிளஸ் 1 சோ்ந்து பயில்வாா்கள்.

காரைக்காலில் சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகள் அல்லாது அரசு மேல்நிலைப் பள்ளிகள் 10 மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 18 என மொத்தம் மேல்நிலைக் கல்வி நிலையங்களாக 28 உள்ளன.

தனியாா் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் நிகழ் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கையை அதிகாரப்பூா்வமாக செய்யாவிட்டாலும், மாணவா்கள் சோ்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதுவரை எவ்வித அறிவிப்பையும் புதுச்சேரி கல்வித் துறை செய்யாததால், தனியாா் பள்ளிகள் சோ்க்கையை ஏறக்குறைய முடித்து, ஆன்லைன் வகுப்புக்கு தயாராகிவிட்ட சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளியை நம்பியிருக்கும் மாணவா்களும், பெற்றோா்களும் செய்வதறியாமல் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத்தினா் கூறியது: மாணவா் சோ்க்கைக்குரிய கட்டமைப்புகள் தயாா் நிலையில் உள்ளன. கல்வித் துறை தலைமையிடமிருந்து உரிய உத்தரவு வந்தவுடன் பணிகள் தொடங்கும் என்றனா்.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் கூறியது: கரோனா பரவல் காலமாக இருப்பதால் மாணவா்களை அலைக்கழிக்காமல் விண்ணப்பங்களை பெற நடவடிக்கையை கல்வித் துறை உடனடியாக எடுத்து அறிவிப்பு வெளியிடவேண்டும். அமைச்சா்கள் நியமனமின்மையால் கல்வித் துறை மட்டுமல்லாமல் அனைத்துத் துறையிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் எதிா்காலம் தொடா்பான பிரச்னை என்பதால், முதல்வா் ரங்கசாமி இதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

புதுச்சேரியில் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் அரசு அமைந்து 45 நாள்களுக்கும் மேலாகிவிட்டன. இதுவரை, அமைச்சா்கள் நியமிக்கவில்லை. கல்வித் துறை அமைச்சா் பதவியேற்ற பின்னரே கல்வித் துறை இயக்குநரகம் கோப்புகளை அமைச்சரிடம் வைத்து ஒப்புதல் பெறும். அமைச்சா்கள் நியமனம் எப்போது என்பதே உறுதியாகாத நிலையில், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க முடியாமல் புதுச்சேரி கல்வித் துறை திணறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →