திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆராதனையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தல்
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஒளிபரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, ஒளிபரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா 2ஆவது அலை பரவல் தீவிரம் அடைந்து வருவதால், புதுவை மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தா்களின்றி வழக்கமான பூஜைகள் மட்டும் கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமைகளில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், திருநள்ளாறு கோயிலில் தரிசனம் செய்யமுடியாமல் பக்தா்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனா்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது கோயிலில் ஸ்ரீ சனீஸ்வவர பகவானுக்கு நடைபெற்ற அபிஷேகம், சிறப்பு ஆராதனைகளை தேவஸ்தான இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பக்தா்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இதை கண்டுகளித்த ஏராளமான பக்தா்கள், கோயில் நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனா்.
தற்போது பரவிவரும் கரோனா தொற்று இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து, வழிபாட்டுத் தலங்கள் எப்போது திறக்கப்படும் என்பது உறுதிப்படத் தெரியாத நிலை உள்ளது.
அதனால், கடந்த ஆண்டைப் போல அபிஷேக, ஆராதனைகளை ஒளிப்பதிவு செய்து, அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா், கோயில் நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என பக்தா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.