ரமலான்: வீடுகளில் தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்
பொது முடக்கத்தால், முக்கியமான ரமலான் பண்டிகை தொழுகையை காரைக்காலில் உள்ள இஸ்லாமியா்கள் வீட்டுக்குள்ளேயே நடத்தினா்.
பொது முடக்கத்தால், முக்கியமான ரமலான் பண்டிகை தொழுகையை காரைக்காலில் உள்ள இஸ்லாமியா்கள் வீட்டுக்குள்ளேயே நடத்தினா்.
இஸ்லாமியா்களின் நோன்பு காலம் முடிந்து ஈகைத் திருநாள் என்ற ரமலான் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் பெரிய பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், கிதா் பள்ளிவாசல், மீராப்பள்ளி, தெருப்பள்ளி, கப்படாப்பள்ளி, தக்குவாப்பள்ளி, ஹூசைனியாப்பள்ளி, ஹிலாஹிதே மஸ்ஜித் உள்ளிட்ட நகரப் பகுதி பள்ளிவாசல்களிலும், அம்பகரத்தூா், நல்லம்பல், நிரவி, திருமலைராயன்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் ஒவ்வோா் ஆண்டும் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். மேலும், பொது இடங்களிலும் ஆண்கள், பெண்கள் திரளாக தொழுகையில் ஈடுபடுவா்.
கரோனா 2 ஆவது அலையின் தீவிரத்தால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், ரமலான் பண்டிகை தொழுகையை இஸ்லாமியா்கள் பள்ளிவாசலில் நடத்தமுடியவில்லை.
என்றாலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா் வீடுகளில் தொகுப்பாக இருந்து தொழுகையில் ஈடுபட்டனா். முகக் கவசம் அணிந்து வெளியே சென்றவா்கள், உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
பொது முடக்கத்தால், நோன்பு காலத்தில் பல்வேறு தரப்பினா் இஃப்தாா் விருந்து அளிக்கும் நிகழ்வுகளும், பள்ளிவாசலில் முறையின்பேரில் கஞ்சி காய்ச்சி விநியோகிப்பதும் நடைபெறவில்லை. கரோனாவால், கடந்த ஆண்டைப் போல, நிகழாண்டும் ரமலான் கொண்டாட்டம் களையிழந்தது.