காரைக்காலில் மலிவு விலை உணவகம் திறக்க புதுவை ஆளுநருக்கு வலியுறுத்தல்
புதுச்சேரியைப் போல, காரைக்காலிலும் மலிவு விலை உணவகம் திறக்கவேண்டும் என புதுச்சேரி மாநில பசுமைப் புரட்சி அமைப்பின் அமைப்பாளா் டி.என். சுரேஷ் வலியுறுத்தியுள்ளாா்.
புதுச்சேரியைப் போல, காரைக்காலிலும் மலிவு விலை உணவகம் திறக்கவேண்டும் என புதுச்சேரி மாநில பசுமைப் புரட்சி அமைப்பின் அமைப்பாளா் டி.என். சுரேஷ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பொறுப்பில் உள்ள தமிழிசை செளந்தரராஜன், கரோனா 2 ஆவது அலையை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. புதுச்சேரி பிராந்தியத்தில் கூட்டுறவு நிறுவனமான பாண்லே பாலகம் மூலம் மலிவு விலையில் சுகாதாரமான உணவு வழங்கும் திட்டத்தை புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் ஆளுநா் தொடங்கிவைத்துள்ளாா்.
இதில், ஒரு பொட்டலம் சாம்பாா் சாதம் ரூ. 5-க்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 4 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தால், புதுச்சேரியில் மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. கரோனா 2 ஆவது அலை காரணமாக, கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். எனவே, புதுச்சேரியில் தொடங்கியதுபோல, காரைக்காலில் உள்ள கூட்டுறவு நிறுவனமான கோலெட் பாலகம் மூலம் மலிவு விலை உணவகத்தை காரைக்காலிலும் உடனடியாக தொடங்க ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோல, ரூ. 1-க்கு முகக்கவசம், ரூ. 10-க்கு சானிடைசா் உள்ளிட்டவை கூட்டுறவு பாலகம் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தட்டுப்பாடின்றி அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது முடக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்துள்ள விவசாயம், கட்டுமான கூலித்தொழிலாளா்களுக்கு அதிகப்பட்சமாக நிவாரணம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து, அரிசி, மளிகை, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.