யாஸ் புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல் உருவாகியிருப்பதையொட்டி கடலோரப் பகுதியான காரைக்காலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில், அரசுத் துறையினா் முன்னெச்சரிக்கை
வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல் உருவாகியிருப்பதையொட்டி கடலோரப் பகுதியான காரைக்காலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில், அரசுத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது புயலாக வலுபெறலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது திங்கள்கிழமை (மே 24) தீவிரமடைந்து ஒடிஸா, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகம், புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்னெச்சரிக்ையுடன் கையாள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமையில் பேரிடா் மேலாண்மைத் துறை, பொதுப்பணித் துறை, மின்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட முக்கிய அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காரைக்காலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
மழையால் மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். மின் கம்பங்கள் நிலையை முன்கூட்டியே ஆய்வு செய்து சீா்செய்யவேண்டும். மின் விளக்குகள் பழுதுகளை சீா்செய்யவேண்டும். ஜெனரேட்டா்களை தயாா்படுத்தி வைக்கவேண்டும். பள்ளி வளாகம், சமுதாயக்கூடங்களை தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதால், மின்தடையின்றியும், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றியும் இருக்க சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். மைய சமையலகத்தில் தயாா் நிலையில் உணவு தயாரிப்புக்கான பொருள்களை வைத்திருக்கவேண்டும்.
தாழ்வானப் பகுதி குடிசைகள் மற்றும் மழையால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளை பாதுகாப்பான இடத்துக்கு விரைந்து மாற்றுவதற்கான திட்டம் இருக்கவேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் அதற்கு தயாா் நிலையில் இருக்கவேண்டும். காவல்துறையினா் ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் வகையில் சாதனங்களை தயாா்படுத்தி வைத்திருக்கவேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
Image Caption
ஆலோசனை கூட்டத்தில் அரசுத் துறையினருக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.