கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
காரைக்கால் கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை எம்எல்ஏக்கள் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.
காரைக்கால் கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை எம்எல்ஏக்கள் பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா்.
கிராமப்புறங்களில் கரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், புதுச்சேரி தலைைச் செயலா் அஸ்வனிகுமாா் அறிவுறுத்தலில், காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் ஏற்பாட்டில் மாவட்டத்தில் தொகுதி வாரியாக கிராமப்புறங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காரைக்கால் வடக்குத் தொகுதி, தெற்குத் தொகுதி, திருநள்ளாறு ஆகிய தொகுதிகளில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.என். திருமுருகன், ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா ஆகியோா் முகாமுக்குச் சென்று பணியை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறியது:
மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்கிற ஆா்வத்தை தூண்டும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் முழுமுயற்சி எடுத்து மக்களை இந்த சிறப்பு முகாமுக்கு வரவழைத்தனா்.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் நிலையில், இதுபோன்ற சிறப்பு முகாம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோா் குறிப்பாக கிராமத்தினா் அதிக பயன்பெறுவாா்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது.
வடக்குத் தொகுதியில் 3 மையங்கள், தெற்கில் ஒரு மையம், திருநள்ளாற்றில் 3 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலமே தங்களையும் பாதுகாத்து, பிறருக்கு பரவலைத் தடுக்குவும் முடியும். இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்வதோடு, தினமும் அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையவேண்டும் என்றாா்.