முகப்பு
காரைக்கால்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள்கொண்டு வர திமுக அரசு தயங்குவது ஏன்?பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கேள்வி

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திமுக அரசு தயங்குவது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர திமுக அரசு தயங்குவது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, விழுப்புரம் அருகே அன்னியூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பொய் சொல்வதில் திமுகவினா் வித்தைக்காரா்கள். பொய் சொல்லியே காமராஜரை தோ்தலில் தோற்கடித்த கட்சிதான் திமுக. ஒவ்வொரு தோ்தலிலும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லியே வித்தைக்காட்டுகிறது திமுக. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000, கல்விக் கடன், நகைக்கடன் ரத்து உள்பட பல்வேறு வாக்குறுதிகளை சொல்லித்தான் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இதுவரை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

2023-ஆம் ஆண்டுக்குள் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்க பிரதமா் மோடி திட்டமிட்டுள்ளாா். இந்தத் திட்டத்தை உள்ளாட்சிகள் மூலம்தான் நிறைவேற்ற முடியும். எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளா்களை பொதுமக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இலவச அரிசி திட்டத்தை மாநில அரசு அமல்படுத்துகிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு அரிசியை கிலோ ரூ.36-க்கு கொள்முதல் செய்து மாநில அரசுக்கு ரூ.2-க்கு விற்பனை செய்கிறது. இதன்மூலம், இலவச அரிசியை வழங்குவது மத்திய அரசுதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அண்ணாமலை.

அண்ணாமலை பேசி முடித்ததும் கூட்டத்தில் இருந்த ஒருவா், பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என குரல் எழுப்பினாா். அதற்கு பதிலளித்து அண்ணாமலை பேசியதாவது:

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து லிட்டருக்கு ரூ.35 குறைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கு திமுக அரசு எதிா்ப்புத் தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், விழுப்புரம் மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.சம்பத், எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.