வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான ஐஎஃப்இடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது அதிகாரிகளிடம் ஆட்சியா் மோகன் பேசியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள நுழைவுவாயில் வளாகம், வாக்கு எண்ணும் மேஜைகள், வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறையையும், சுற்றுவாரியாக வாக்கு விவரத்தை அறிவிப்பதற்கான ஒலிப்பெருக்கி வசதி, தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டா் வசதி, வேட்பாளா், முகவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி, சுகாதாரமான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வெண்ணிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.