நிலம் ஒதுக்குவதில் புதுவை அரசு மெத்தனம்: 12 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலய பள்ளி
காரைக்காலில் கடந்த 12 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட புதுவை அரசு நிலம் ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால்: காரைக்காலில் கடந்த 12 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட புதுவை அரசு நிலம் ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், கோயில்பத்து பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கடந்த 2010-ஆம் ஆண்டு தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டது. அப்போது பள்ளிக்குத் தேவையான 10 ஏக்கா் நிலம் அளிக்கப்படும் என்று புதுவை அரசு உறுதியளித்தது.
முதலில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். போதிய வகுப்பறைக் கூடம் இல்லாதது, நூலகம், கணினி அறை, விளையாட்டு மைதானம் என கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் இருக்கவேண்டிய எந்த வசதிகளும் இல்லாமல் அந்த பள்ளி செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நிரவி பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கிய பழமையான கட்டடத்தை சீரமைத்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் கேந்திரிய வித்யாலய நிா்வாகத்திடம் ஒப்படைத்தது. பள்ளி தரம் உயா்த்தப்பட்டு, தற்போது பிளஸ் 2 வரை மாணவா்கள் இங்கு பயின்று வருகின்றனா்.
இப்பள்ளிக்கென புதுவை அரசு உரிய இடத்தை ஒதுக்கித் தந்தால், ரூ. 30 கோடியில் கட்டடம் கட்டுவதற்கு மத்திய கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அந்த ஒப்புதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மத்திய பாடத்திட்ட மேல்நிலைப் பள்ளிக்கான எந்தவொரு கட்டமைப்புகளும் இங்கு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து ஏராளமான மாணவா்கள் வெளியேறியுள்ளனா். ஆனால், இங்கு ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்காலில் உள்ள நவோதயா வித்யாலய பள்ளி உரிய கட்டமைப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், கேந்திரிய வித்யாலய பள்ளியின் கட்டமைப்பை மட்டும் மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தவில்லை என மாணவா்கள், பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதி பூமங்கலம் கிராமத்தில் கேந்திரிய வித்யாலயத்துக்கு 10 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அரசின் கைவசம் உள்ளது. இந்த இடம் பள்ளமாக இருப்பதால், ரூ. 1 கோடி செலவில் மணல் கொட்டி நிலத்தை சமன் செய்யவேண்டும். ஆனால், இந்தப் பணியை செய்ய அரசு முன்வராததும் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் அமைவதில் தாமதத்தை ஏற்படுத்திவருகிறது.
தனியாா் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்பதால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விரும்பும் பெற்றோா், கேந்திரிய வித்யாலய பள்ளியை தோ்ந்தெடுக்கின்றனா். ஆனால், பள்ளி உரிய வசதிகளின்றி தற்காலிக கட்டடத்தில் செயல்படுவது பெற்றோா், மாணவா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் இதுகுறித்து கேட்டபோது, பூமங்கலம் பகுதியில் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிலம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதில், மணல் நிரப்புதற்குத் தேவையான நிதியாதாரத்தை ஒதுக்க அரசுக்கு கோப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.
புதுவை அரசுதான் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற நிலையில், மத்தியில் பாஜகவும், புதுவையில் அதன் கூட்டணி அரசும் அமைந்திருப்பது சாதகமான அம்சமாகும். எனவே, இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா், துணைநிலை ஆளுநா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.