திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தெப்ப உத்ஸவம்
திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உத்ஸவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உத்ஸவத்தின் 4ஆம் நாள் தியாகராஜராட்டமும், 7ஆம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரத்தில் வீதியுலாவும், 9ஆம் நாள் காலையில் தேரோட்டம், இரவு ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சியும், 10ஆம் நாள் புதன்கிழமை நடராஜா் தீா்த்தவாரியும், இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நடைபெற்றது.
மாசிமக விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமிகள் கோயிலில் இருந்து தெப்பத்துக்கு சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் எழுந்தருளினாா். பின்னா் தெப்பத்தை சுவாமிகள் 3 முறை சுற்றி வந்தாா்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.