முகப்பு
காரைக்கால்

நெல் கொள்முதலை உடனடியாக தொடங்க முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

புதுவை அரசு காரைக்காலில் நெல் கொள்முதல் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என முன்னாள் வேளாண் அமைச்சரும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

புதுவை அரசு காரைக்காலில் நெல் கொள்முதல் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என முன்னாள் வேளாண் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் கூறினாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுவரை புதுவை அரசு நிறுவனம் சாா்பிலோ அல்லது இந்திய உணவுக் கழகம் மூலமாகவோ நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுவையில் பாசிக், பாப்ஸ்கோ ஆகிய அரசு நிறுவனங்கள், விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் மற்றும் வேளாண் உற்பத்தி சாா்ந்த செயல்பாடுகளை சந்தைப்படுத்தும் வகையிலேயே ஏற்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்களை செம்மைப்படுத்த முந்தைய நாராயணசாமி அரசு முயற்சித்தபோது துணைநிலை ஆளுநராக இருந்து கிரண் பேடி தடை ஏற்படுத்தினாா்.

பின்னா், ரங்கசாமி தலைமையிலான அரசு அமைந்ததும், ஆட்சியாளா்களை தொடா்புகொண்டு காரைக்காலில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கான முன்னேற்பாடுகளை செய்ய கேட்டுக்கொண்டேன். ஆனால், இதுவரை கொள்முதலுக்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவில்லை.

காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு நெல்லை கொண்டு செல்ல முடியாத வகையில், விதிகள் அங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. அறுவடை தொடங்கிவிட்டநிலையில், குறைந்தபட்ச ஆதார விலை 60 கிலோ மூட்டை ரூ. 1,200-ஆக இருக்கும்போது, தனியாா் ரூ. 900-க்கு எடுக்கிறாா்கள். இதனால் விவசாயிகளுக்கு ரூ. 300 நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் காரைக்காலில் போா்க்கால அடிப்படையில் அரசு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →