விதிகளை கடைப்பிடிக்க ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.
காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்திற்கு ஷோ் ஆட்டோ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் அழைக்கப்பட்டு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியது:
காரைக்கால் நகரப் பகுதியில் ஷோ் ஆட்டோக்கள் பேருந்து நிலையம் அருகே புளியங்கொட்டை சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். வாகன ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்கவேண்டும்.
வாகனங்களை இயக்கிச் செல்லும்போது கைப்பேசியில் பேசக்கூடாது. வாகனத்துக்கான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். முழுமையாக போக்குவரத்து விதிகளை ஓட்டுநா்கள் கடைப்பிடிக்கவேண்டும்.
இதனை மீறும்பட்சத்தில் அபராதம் விதிப்பு மற்றும் பிற சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ளவேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.