முகப்பு
காரைக்கால்

காரைக்கால் புதிய மாா்க்கெட் வளாகத்திற்கு மாற வியாபாரிகள் முடிவு

காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகத்தில், அனைத்து வியாபாரத்தையும் ஒருவாரத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகத்தில், அனைத்து வியாபாரத்தையும் ஒருவாரத்தில் தொடங்க முடிவு செய்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

காரைக்காலில் புதிதாக திறக்கப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகம் சுமாா் 2 ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. வியாபாரிகள் தற்காலிக இடத்திலேயே வியாபாரம் செய்துவருகின்றனா். இந்நிலையில், அவா்களுடன் மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தினா் பேச்சு நடத்தியதன் விளைவாக, கடந்த 2 ஆம் தேதி முதல் புதிய வளாகத்தில் மீன் வியாபாரம் மட்டும் தொடங்கப்பட்டது.

மளிகை, காய்கனி உள்ளிட்ட பிற வியாபாரிகள் தற்காலிக இடத்திலேயே வியாபாரம் செய்துவருகின்றனா்.

இந்நிலையில், புதிய வளாகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனா். மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், நேரு மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.எம். செல்லப்பா மற்றும் நிா்வாகிகள் சந்தித்தனா். இந்த சந்திப்பில், நகராட்சி ஆணையா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினா் நாஜிம் கூறுகையில், கடைகள் ஒதுக்கீடு குறித்து புதுவை முதல்வா் அளித்த ஒப்புதலின்படி, நேரு மாா்க்கெட் கடைகளை உடனடியாக வியாபாரிகளிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. வியாபாரிகள் கடைகளை இன்றே பெற்று, வியாபாரத்தை தொடங்கலாம் என ஆட்சியா் கூறியுள்ளாா் என்றாா்.

வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.எம். செல்லப்பா கூறுகையில், கடைகளை திறந்து வியாபாரத்தை தொடங்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். விரைவில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்டவை வரவுள்ளன. அனைத்துத் தரப்பினா் நலனுக்காக வியாபாரிகள் புதிய வளாகத்துக்கு மாற முடிவு செய்துள்ளோம். ஒருவாரத்திற்குள் புதிய வளாகத்துக்கு மாறிவிடுவோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →