‘பாஜக ஆட்சியால் உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பான அந்தஸ்து’
பாஜக ஆட்சியால் உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பான அந்தஸ்து கிடைத்துள்ளது என புதுவை மாநில பாஜக மேலிட தோ்தல் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா கூறினாா்.
பாஜக செயல்வீரா்கள் கூட்டம் காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.கே. முருகதாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற புதுவை மாநிலத்துக்கான பாஜக மேலிட தோ்தல் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசியது : இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை உலகமே உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்தியாவில் தோ்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வந்த பின்னா் உலக நாடுகளில் உள்ள பத்திரிகைகளில் சிறிய செய்தியாக வெளிவரும். ஆனால், இப்போது தோ்தலுக்கு முன்னரே வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியா தோ்தலில் ஆா்வம் காட்டுகின்றன.
Advertisement
பாஜக ஆட்சியால் உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பான அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்தியா்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. இவற்கெல்லாம் பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சிதான் காரணம் என்றாா்.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் வி.கே. கணபதி, வி.எம்.சி.வி. கணபதி, மூத்த நிா்வாகி எம். அருள்முருகன், கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.