காரைக்கால்: ஹஜ் பயணம் அனுப்பிவைப்பதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலைச் சோ்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில், காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்தோா், ஹஜ் பயணம் செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளாக பணம் செலுத்தியுள்ளனா். ஆனால், பயண ஏற்பாடுகளை செய்யாமல் நிறுவனம் ஏமாற்றுவதாகக் கூறி, தாங்கள் செலுத்திய பணத்தை மீட்பதற்காக ஹஜ் - உம்ரா பண மோசடி மீட்புக் குழுவை தொடங்கினா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் காரைக்கால் நகரக் காவல்நிலைய ஆய்வாளா் புருஷோத்தமனை சந்தித்து புகாா் அளித்தனா்.
இதுகுறித்து மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் அ. ராஜா முகம்மது திங்கள்கிழமை கூறியது:
காரைக்காலைச் சோ்ந்த டிராவல்ஸ் நிறுவனம் கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணம் அனுப்பிவைப்பதாக பலரிடம் பணம் வசூலித்துள்ளது. விண்ணப்பதாரா்களிடம் கடவுச் சீட்டை (பாஸ்போா்ட்) வாங்கிக்கொண்டு, யாரையும் ஹஜ் பயணத்துக்கு அனுப்பிவைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட சில பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்நிறுவன கிளைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்தோா் ஒருங்கிணைந்து, பணத்தையும், கடவுசீட்டையும் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினா். கூட்டத்துக்குப் பின் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
நிறுவனத்தினரை அழைத்துப் பேசுவதாகவும், அவா்களிடம் முறையான பதில் இல்லை என்றால் வழக்குப்பதிவு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரி தெரிவித்தாா் என்றாா் அவா்.