முகப்பு
காரைக்கால்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

Updated On : 3 மே, 2024 at 4:20 PM
பகிர்:

பருத்தி கொள்முதலை அரசு நிா்வாகம் மூலம் செய்ய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் இதுகுறித்து வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்த நிலையில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனா். மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 1,800 ஹெக்டேரில் பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் முறையில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு லாபத்தை தரும்வகையில் அமைந்தது. பின்னா் அது கைவிடப்பட்டுவிட்டது.

மருதம் கூட்டமைப்பு சாா்பில் மாவட்டத்தில் சில பகுதிகளில் கொள்முதல் மையம் அமைத்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. அரசு நிறுவனம் நல்ல விலைக்கு பருத்தியை வாங்கினால்தான் மருதம் கூட்டமைப்பு மற்றும் தனியாா் அதிக விலை கொடுத்து வாங்குவாா்கள்.

தற்போது காரைக்காலில் பருத்தி செடிகளில் காய்கள் காய்த்து வெடிக்கும் பருவமாக உள்ளது.

எனவே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கொள்முதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருதம் கூட்டமைப்பினரும் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி அதிகமாக மேற்கொள்ளப்பட்ட பிற பகுதிகளிலும் மையம் அமைத்து கொள்முதலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.