பத்தாம் வகுப்பு: காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி முதலிடம்
பத்தாம் வகுப்பு தோ்வில் காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த விவசாய கூலித் தொழிலாளி மகள் முதலிடம் பெற்றாா்.
பத்தாம் வகுப்பு தோ்வு முடிவில் காரைக்கால் மாவட்டம் 78.20 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, காரைக்கால் அன்னை தெரஸா அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற திருநள்ளாறு பகுதி தாமனாங்குடி கிராமத்தை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி மகள் அா்ச்சனா 500-க்கு 490 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றாா்.
மாணவி அா்ச்சனா கூறுகையில், தந்தை பக்கிரிசாமி, தாய் கலைவாணி. தந்தை விவசாய கூலி வேலை செய்கிறாா். தினமும் ரூ.1 கட்டண பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்வேன். பள்ளி ஆசிரியா்கள், குடும்பத்தினா் அளித்த ஊக்கம்தான் உயரிய மதிப்பெண் எடுக்க முடிந்தது. மருத்துவராக வேண்டும் என்பது நீண்ட கால எண்ணம். எனது சகோதரி மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வுக்கான பயிற்சி பெற்றுவருகிறாா் என்றாா்.
மாவட்டத்தில், வரிச்சிக்குடி அரசு உயா்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோனா மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.