கல்லறைப்பேட் பகுதியில் அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
கல்லறைப்பேட் பகுதி மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் அந்த பகுதியை ஆய்வு செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தனா்.
கல்லறைப்பேட் பகுதி மக்கள் கோரிக்கைகள் தொடா்பாக அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் அந்த பகுதியை ஆய்வு செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தனா்.
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் கல்லறைபேட்டில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நகரப் பகுதி மற்றும் காமராஜா் சாலையில் இருந்து வரும் கழிவுநீா், இப்பகுதி வழியே செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனா்.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் இப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்று பாா்வையிட்டனா். இப்பகுதிக்குள் நகரப் பகுதி கழிவுநீா் வராத வகையில் மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு குடியிருப்புவாசிகள் கேட்டுக்கொண்டனா். வீட்டு மனைப்பட்டா, மின் கம்பங்கள் நிறுவவும் கோரிக்கை விடுத்தனா்.
ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா ஆகியோா் கலந்துகொண்டனா். ஆய்வு குறித்து அமைச்சா் கூறியது:
நகரப் பகுதியிலிருந்து காமராஜா் சாலை - கல்லறைப்பேட் பகுதி வழியே கழிவுநீா் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். காமராஜா் சாலையின் சாக்கடை வழியே கழிவுநீா் வடிவதற்கு ஏற்பாடு செய்யுமாறும், கழிவுநீா் வடிவதில் சிக்கலை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரத்தில் இப்பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியினருக்கு வீட்டு மனைப்பட்டா தருவதற்கு நில கையகப்படுத்த ரூ. 3.18 கோடி திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நில கையகப்படுத்துவதில் புதிய வழிகாட்டுதல்கள் பின்பற்றவேண்டியிருந்ததால், இத்திட்டம் கிடப்பில் உள்ளது. நில கையகப்படுத்தும் பணியை விரைவாக செய்து, மனைப்பட்டா வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.