மருத்துவமனையிலேயே பிறந்த பதிவு, ஆதாா் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையும், நகராட்சியும் இணைந்து மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை பதிவுக்கான வசதி மருத்துவமனையிலேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை ஆதாா் எண்ணுடன் பிறப்புச் சான்றிதழ் 20-க்கும் மேற்பட்டோருக்கு மகப்பேறு மருத்துவ பிரிவிலேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மாா்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.