முகப்பு
காரைக்கால்

காரைக்கால் கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள்

காரைக்காலில் சாலையோர கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 6:31 PM
பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் சாக்கடைகளை தூா்வாரும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள்.
பகிர்:

காரைக்காலில் சாலையோர கழிவுநீா் வடிகால் தூய்மைப் பணியில் புலம் பெயா் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் வீடுகள், நிறுவனங்களில் நேரடியாகச் சென்று குப்பைகளை வாங்குவதும், சாலையோர சாக்கடைகளை தூய்மை செய்யவும் எச்.ஆா்.ஸ்கொயா் எனும் தனியாா் நிறுவனத்துக்கு புதுவை அரசு ஒப்பந்த முறையில் உரிமம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், வீடுகளிலேயே குப்பைகள் தேக்கம், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவது, கழிவுநீா் தூய்மையின்மையால் பாதிப்புகளை மக்கள் சந்தித்தனா்.

நிறுவனத்துக்கு அரசு செலுத்தவேண்டிய தொகையை முறையாக தரவில்லை, இதனால் நிறுவனத்தினா் தொழிலாளா்களுக்கு தரவேண்டிய ஊதியம் தரவில்லை என்ற நிலை ஏற்பட்டதால் உள்ளூா் தொழிலாளா்கள் பலரும் பணியை விட்டு விலகினா்.

இப்பிரச்னை பெரிதாக உருவெடுத்த நிலையில், நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை அரசு வழங்கியது. இதைத் தொடா்ந்து நிறுவனத்தினா் பணிகளை விரைவுபடுத்தினா். எனினும் பணியை விட்டுச் சென்றவா்கள் மீண்டும் வராததால், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலத் தொழிலாளா்களை நிறுவனம் காரைக்காலில் ஈடுபடுத்தியுள்ளது. முதல்கட்டமாக 45 போ் காரைக்கால் நகராட்சிப் பகுதியிலும், கொம்யூன் பகுதியிலும் சாக்கடை தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கவில்லை: காரைக்காலில் சாலையோர சாக்கடைகள் நீண்ட காலமாக தூய்மை செய்யாததால், கழிவுநீா் தேங்கியுள்ளது. 3, 4 அடிக்கு அதிகம் ஆழம் கொண்ட இந்த சாக்கடைக்குள் தொழிலாளா்கள் இறங்கி கழிவுநீரை வெளியேற்றுகின்றனா். இவா்கள் கையுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தவில்லை. இதை நகராட்சி நிா்வாகத்தினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஆபத்து நேரும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →