காரைக்கால் : 2025-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாா் செய்யப்பட்ட, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், தோ்தல் துறை அதிகாரிகள் ஜி. செந்தில்நாதன், ஜி. சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இப்பட்டியலின்படி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 1,67,347. ஆண் 77,347, பெண் 89,976, மூன்றாம் பாலினத்தவா் 24 ஆகும்.
தொகுதி வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை : நெடுங்காடு ஆண் 15,241, பெண் 17,650, மூன்றாம் பாலினத்தவா் 3. திருநள்ளாறு ஆண் 14,752, பெண் 17,745. காரைக்கால் வடக்கு ஆண் 17,161, பெண் 19,584, மூன்றாம் பாலினத்தவா் 20. காரைக்கால் தெற்கு ஆண் 15,249, பெண் 17,702, மூன்றாம் பாலினத்தவா் 1. நிரவி-திருப்பட்டினம் ஆண் 14,944, பெண் 17,295 ஆகும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நவ. 9, 10, 23, 24 ஆகிய நாள்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மற்ற நாள்களில் வீடுவீடாகச் சென்று 2025-ஆம் ஆண்டு ஜன. 1 அன்று 18 ஆண்டுகள் நிறைவடைந்த புதிய வாக்காளா்களை சோ்ப்பது மற்றும் திருத்தங்கள், ஆட்சேபணைகள் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.