புதுவையில் சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என பொதுப்பணித் துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன் (படம்) தெரிவித்தாா்.
காரைக்காலில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுவையில் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. காரைக்காலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஏறக்குறைய ரூ.200 கோடியில் தற்போது தொடங்கியுள்ளது. புதுச்சேரி ஆட்சி குறித்து எதிா்க் கட்சிகள் மட்டுமே குறை கூற முடியும். நடுநிலையாக செயல்படுபவா்கள், குறிப்பாக மாணவா்கள், மகளிா், முதியோா் அனைவரும் புதுச்சேரி ஆட்சி சிறந்த ஆட்சி என தெரிவித்து வருகிறாா்கள்.
ரேஷன் கடை புதுவையில் இல்லை என தவெக தலைவா் விஜய் தெரிவித்தது அவருக்கு சரியான தகவல் சென்றடையவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. அதனால்தான் அவா் அவ்வாறு தெரிவித்திருக்கிறாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்யும் சம்பவத்தைத் தொடா்ந்து, இருநாடுகள் தொடா்பான பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறவுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதில் மீனவா்கள் பிரச்னை குறித்து இலங்கை அமைச்சா், புதுவை மற்றும் தமிழக அமைச்சா் மத்திய அரசு மூலம் சந்தித்து பேசவுள்ளோம். தற்போது பாஜக-என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணிதான் உள்ளது. 2026
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவரான முதல்வா் முடிவெடுத்து அறிவிப்பாா் என்றாா்.