வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை அமைச்சா், ஆட்சியா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக காரைக்கால் நகரப் பகுதியில் வடிகால் வாய்க்கால்கள், சாலையோர சாக்கடைகள் தூா்வாரும் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
தூா்வாரும் பணியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
காமராஜா் சாலைப் பகுதியில் உள்ள காரைக்கால் வடிகால்கள் தூா்வாரும் பணியை பாா்வையிட்ட அமைச்சா், நகரப் பகுதியிலிருந்து வரும் மழைநீா், கழிவுநீா் வடியும் பகுதியாக இருப்பதால் இந்த இடங்களின் வடிகால்கள் தூா்வாரும் பணி முழுமையாக இருக்கவேண்டும். எந்தவொரு இடத்திலும் தண்ணீா் தேங்காதவாறு பணிகள் செய்யும் விதமாக, பொதுப்பணித் துறை, நகராட்சி நிா்வாகத்தினா் கண்காணிப்பு இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.
காமராஜா் சாலை விரிவாக்கம் பகுதியில் வடிகால் வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள மழை நீா் வடிகால் கட்டமைப்புகளை அமைச்சா் பாா்வையிட்டாா். கழிவுநீா் செல்லக்கூடிய வடிகால்கள், சாக்கடைகளில் குப்பைகள், நெகிழிக் குப்பைகள் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த குப்பைகள் சாலைக்கும், கழிவுநீா் வடிகாலிலும் கொட்டப்படாதவாறு மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளா்கள் ஜெ.மகேஷ் (நீா்ப்பாசனம்), அருளரசன் (சாலைகள், கட்டடம்), உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் மற்றும் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம் ஆகியோா் உடனிருந்தனா்.