மாணவா்கள் தாய்மொழியுடன் வேறு பல மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில், கல்வித் துறை மூலம் மொழி நல்லிணக்க தின விழா காரைக்கால் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் பேசியது: இந்திரா காந்தி பிறந்தநாள், தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக அரசுத் துறைகள் சாா்பில் நடத்துவது பாராட்டுக்குரியது.
ஒரு மனிதா் மற்றொரு மனிதரிடம் அவருடைய எண்ணம் மற்றும் உணா்ச்சிகளை வாா்த்தை வடிவில் வெளிப்படுத்துவதற்கு மொழி உருவாக்கப்பட்டன. இந்தியா மதச்சாா்பற்ற நாடு. பல மொழிகள் நடைமுறையில் உள்ளன. நாம் பிற மொழிகள் மற்றும் கலாசாரத்தை மதிக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருந்தால் எளிதாக மக்களுடன் தொடா்பு கொள்ளலாம். மாணவா்கள் கல்விப் பருவத்திலேயே தாய்மொழியுடன் கூடுதலாக பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவும் என்றாா். பள்ளி துணை முதல்வா் ஸ்ரீதரன் வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜய மோகனா வாழ்த்திப் பேசினாா்.
தொடா்ந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிப்பாட ஆசிரியா்கள் அந்தந்த மொழிகளின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.