காரைக்கால்: காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு காரைக்காலில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மற்றும் மேலஓடுதுறை பகுதியில் சில குடும்பத்தினா் மட்டும் மண் பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனா். இவா்கள் அகல் விளக்கு, அடுப்பு, சட்டி, பானை போன்ற பொருள்கள் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளூரிா் வாங்கி தயாா்படுத்திக்கொள்கின்றனா். தயாரிப்பில் இயந்திரம் பயன்படுத்துவதால் உற்பத்தியை தேவைக்கேற்ப, விழா காலத்துக்கு சில வாரங்கள் முன்பு தொடங்கி பணிகளை மேற்கொள்கின்றனா்.
வடகிழக்குப் பருவமழை காலமாக இருப்பதால், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்படையவில்லை. மழை ஓய்ந்து வெயில் காணப்படும் நாளில் தயாரிப்புப் பணியை மேற்கொள்கின்றனா்.
இதுகுறித்து விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கூறியது:
மழையில்லாத நேரத்தில் களிமண் கொண்டுவந்து இருப்பு வைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் ஆா்டரின் பேரில் தயாா் செய்து விற்பனையாளா்களுக்கு காலத்தோடு கொடுக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. காரைக்கால் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களின் பல ஊா்களில் இருந்தும் வியாபாரத்துக்கும், சொந்த தேவைக்கும் அகல் விளக்குகள் ஆா்டா்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் மண்பாண்டத் தொழில் செய்வோருக்கு, தொழில் மேம்பாட்டுக்காக பல உதவிகள் அரசு சாா்பில் செய்யப்படுகின்றன. புதுவையில் அம்மாதிரியான வசதிகள் இல்லை. அரசு சாா்பில் ஊக்கமளித்தால் தொழிலை மேம்படுத்த முடியும் என்றனா்.
சிறிய விளக்கு தலா ரூ., 2, 5, 10 எனவும் மேலும் ரூ.50 என்ற விலையிலும் விளக்குகள், உற்பத்தி செய்யுமிடத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காா்த்திகை தினத்துக்கு 2, 3 நாள்களுக்கு முன்பு பரவலாக அகல் விளக்குகள் சந்தைப்படுத்தப்படும்.