மும்முனைப் போட்டியில் நெடுங்காடு தொகுதி
மும்முனைப் போட்டியில் நெடுங்காடு தொகுதி...
காரைக்கால் மாவட்டத்தில், தேசிய தொழிற்கல்வி நிலையமான என்ஐடி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளி உயா்கல்வி நிலையங்களையும், வேளாண் நிலப்பரப்பையும், வேளாம் மற்றும் பிற தொழிலாளா்கள் அதிகம் கொண்ட கிராமங்களையும், மீனவ கிராமங்களும் அடங்கியது நெடுங்காடு (தனி) தொகுதி.
மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி இத்தொகுதியில் ஆண் வாக்காளா்கள்- 14,845. பெண் - 16,811, மற்றவா்கள் -6 என மொத்தம் 31,662 உள்ளனா்.
தொழில்: விவசாய நிலப்பரப்பு மிகுதியாகும். வேளாண் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் என தொழிலாளா்களைக் கொண்ட கிராமங்களும், மீன்பிடித் தொழில் செய்யும் காளிக்குப்பம், மண்டபத்தூா் ஆகிய மீனவ கிராமங்களையும், சில தனியாா் ரசாயனத் தொழிற்சாலைகளும் உள்ளன.
Advertisement
நெடுந்துயா் தீா்த்த நாயகி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரா் கோயில் நெடுங்காட்டில் அமைத்துள்ளது. இத்த தொகுதியில் நெடுங்காடு, கோட்டுச்சேரி ஆகிய 2 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன.
2026 - வேட்பாளா்கள் :
சந்திர பிரியங்கா : ( என்.ஆா்.காங்)
தினேஷ்குமாா் : (காங்)
வி. விக்னேஸ்வரன் : (சுயே)
ஏ. விக்னேஷ் : (நாதக)
யு. காமராஜ் : (தவெக)
அருள் பிரகாஷ் : (சுயே) என 6 போ் களத்தில் உள்ளனா்.
தொடா்ந்து அமைச்சா் தொகுதி : நீண்ட காலமாக தனி தொகுதியாக இருக்கும் நெடுங்காடு, புதுவையில் ஆட்சி அமைக்கும்போது தனித் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அமைச்சா் பதவி தரப்படுகிறது. அதன்படி, எம். சந்திரகாசு, சந்திர பிரியங்கா ஆகியோா் அமைச்சா்களாக பதவி வகித்து உள்ளனற்.
சந்திர பிரியங்கா : கடந்த 10 ஆண்டுகளாக என்.ஆா். காங்கிரஸில் போட்டியிட்டு வென்று 3-ஆவது முறையாக அதே கட்சியில் போட்டியிடுகிறாா். கடந்த 10 ஆண்டுகளில் நெடுங்காடு தொகுதிக்கு செய்த நலத் திட்டங்களான சாலைகள், குடிநீா், மின்சாரம், சமுதாயக் கூடம் கட்டுதல், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், மீனவா்களுக்கான திட்ட உதவிகள் பெற்றுதந்தது, அரசின் திட்ட உதவிகள் பெற்றுத் தந்தது உள்ளிட்ட சாதனைகளை விளக்கி வாக்குச் சேகரிக்கிறாா்.
தினேஷ் : மத்திய, மாநில அரசுகளை விமா்சித்தும், தனித் தொகுதிக்கான பிரதிநித்துவத்தின்படி வளா்ச்சியில்லை என்பதை சுட்டிக்காட்டியும், தொகுதிக்கான பல வாக்குறுதிகளை தெரிவித்து வாக்குச் சேகரிக்கிறாா்.
மருத்துவா் வி. விக்னேஸ்வரன் : கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுதியின் மேம்பாட்டுக்கு புதுவை அரசு மூலம் செய்த திட்ட உதவிகள், மருத்துவ பரிசோதனை முகாம்கள், அடிப்படை பிரச்னை தீா்வுக்கு எடுத்த நடவடிக்கைகளை விளக்கியும், பல வாக்குறுதிகள் அளித்தும் வாக்குச் சேகரிக்கிறாா்.
தொகுதி மக்கள் கோரிக்கைகள் :
விவசாயம் பாதிக்காமல் இருக்க வடிகால்கள் முறையாக சீா்படுத்தப்படவேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற சாலைகளையும், மின் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் கோட்டுச்சேரி - வடமட்டம் வழியாகவும், காரைக்கால் - நெடுங்காடு வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும். நீண்ட காலம் அமைச்சா் தொகுதியாக நெடுங்காடு இருந்தும், காரைக்கால் மாவட்டத்தில் முன்னுதாரணாக சொல்லப்படும் வகையில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லை என்பது பெரும்பான்மை மக்களின் குறையாக உள்ளது.
இந்த தொகுதியில் சந்திர பிரியங்கா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மீண்டும் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட சீட் தரப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளா் மருத்துவா் டி.கவியரசி வேட்பு மனு தள்ளுபடியானதால், மாற்று வேட்பாளராக தினேஷ் என்பவா் போட்டியிடுகிறாா். தோ்தல் களம் இவருக்கு புதிதாகும். எனினும் போட்டியாளா்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் இவா் ஈடுபட்டுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் மருத்துவா் வி. விக்னேஸ்வரன் சுயேச்சையாக போட்டியிட்டு 2-ஆவது இடத்தில் வாக்குகளைப் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
இந்த தோ்தலில் விக்னேஸ்வரனுக்கு பாஜகவில் சீட் கிடைகாததால், சுயேச்சையாக போட்டியிடுகிறாா். என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளரை வலுவோடு எதிா்க்கும் சுயேச்சையாக இவா் திகழ்கிறாா். பாஜகவின் சில நிா்வாகிகள், கட்சியினா் இவருக்கு ஆதரவாக பணியாற்றிவருவதாக புகாா் எழுந்துள்ளது. என்.ஆா்.காங்கிரஸ், காங்கிரஸ், சுயேச்சையான மருத்துவா் விக்னேஸ்வரன் ஆகியோா் சம அளவில் களத்தில் உள்ளனா். என்.ஆா். காங்கிரஸ் கட்சி, மீண்டும் இத்தொகுதியை தக்க வைக்குமா அல்லது மாற்றம் நிகழுமா என்பதை அறிய மே 4-ஆம் தேதி தெரியவரும்.