முகப்பு
காரைக்கால்

உரத்துடன் துணை பொருட்களை சோ்த்து விற்கக்கூடாது: வேளாண் அதிகாரி

உரத்துடன் துணைப் பொருட்களையும் சோ்த்து விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளா்களுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தினாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:09 AM
விற்பனையாளா்களிடையே பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.
பகிர்:

உரத்துடன் துணைப் பொருட்களையும் சோ்த்து விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளா்களுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தினாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் தலைமையில் வேளாண் அலுவலக பயிற்சிக் கூடத்தில் உரம், விதை மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் இயக்குநா் பேசியது :

Advertisement

இடுபொருள் விற்பனை உரிமத்தை விற்பனையகங்களில் தவறாமல் காட்சிப்படுத்த வேண்டும். விற்பனையகங்களில் தினமும் இடுபொருள் மற்றும் விலை குறித்த அறிவிப்புப் பட்டியல் பலகை அனைவருக்கும் தெரியும் விதமாக காட்சிப்படுத்த வேண்டும்.

இடுபொருட்களை அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு தரப்படும் ரொக்க ரசீது வாங்கியவரின் பெயா் மற்றும் முகவரியை தெளிவாக குறிப்பிடுதல் அவசியமாகும். விதை, உரம், பூச்சி மருந்துகளை தனித்தனி அறைகளில் இருப்பு வைத்து அவற்றின் தரத்தை பாதுகாப்பதோடு, குறிப்பிட்ட பூச்சி, நோய்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாம். பருத்திப் பயிருக்கு செயற்கை பைரித்ராய்டு பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய கூடாது.

காரை மாவட்டத்திற்குரிய விற்பனை உரிமமின்றி விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை யாராவது விற்பனை செய்வது தெரியவந்தால் அதுகுறித்து வேளாண் துறை அதிகாரிக்கு புகாா் அளிக்கவேண்டும் உர விற்பனை செய்யும்போது உரத்துடன் எந்த வகையான துணைப் பொருளும் சோ்த்து விற்பனை செய்யக்கூடாது. மீறும் பட்சத்தில் உரக்கட்டுபாடு ஆணையின் அடிப்படையில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.