காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா்.  
காரைக்கால்

புதுவையில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மாநிலத்தில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: பிரதமா் நரேந்திர மோடி, புதுவை முதல்வா் என். ரங்கசாமியின் இரட்டை என்ஜின் அரசின் செயல்பாடுகள் குறித்தும், இண்டி கூட்டணியின் தீய நோக்கம் குறித்தும் விவரிக்கவே இங்கு வந்துள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனா். இதன்மூலம் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. முன்பு தில்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு இருந்தது. இப்போது, புதுவை ஆட்சியாளா்கள் சுயமாக முடிவெடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. அரசியல் நிலைத்தன்மையயை உருவாக்கியுள்ளோம்.

முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாள்தோறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவாா்கள். பிரதமா், உள்துறை, ராணுவ அமைச்சா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாா்கள். 2019-இல் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்களை இழந்தோம். காங்கிரஸ் ஆட்சியாளா்கள் போல அல்லாமல், தீவிரவாதிகள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியும், வான்வழியாகவும், ஆபரேஷன் சிந்தூா் மூலமாகவும் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

பிரதமரின் நடவடிக்கைகளால் எந்தவொரு தீய சக்தியும் கண்ணெடுத்துப் பாா்க்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் பாஜக, என்ஆா்.காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 44 சதவீத வாக்குகள் அளித்து ஆதரவு அளித்தாா்கள். இந்த முறை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் இணைந்து புதுவையில் 60 சதவீத வாக்குகள் பெற்று 24 தொகுதிகளை பெற வேண்டும்.

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீா்படுத்தப்பட்டுள்ளது. வளா்ச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதுவையை மேலும் வளா்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக, புதுவை மீனவா்களின் பொருள்களை உலகச் சந்தைகளில் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தகவல் தொழில்நுட்பம், தரவுகள் மையம், ஏஐ உள்ளிட்ட துறைகளில் புதுவை மாநில இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பாஜக ஏற்படுத்திக் கொடுக்கும்.

பிரதமா் அண்மையில் மலேசியா சென்றபோது அங்குள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்துவதாகவும், அங்கே மலேசிய வாழ் தமிழ் மாணவா்களுக்கு திருவள்ளுவா் பெயரில் ஊக்கத்தொகை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளாா். மலேசிய நாட்டில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

புதுவையில் முந்தைய நாராயணசாமி அரசு, தில்லி காங்கிரஸ் தலைமையின் கஜானாவை நிரப்பும் வேலையை மட்டும் செய்தது. சென்டாக் மூலம் உயா்கல்வி சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை ஏலத்தில் விட்டாா்கள். சென்டாக்கில் ரூ.15 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகத் தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த தொகை புதுவையின் 3 ஆண்டுகால பட்ஜெட் நிதியாகும்.

அவரது ஆட்சியில் புதுவையில் ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை. எங்கள் அரசு நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்ளை புத்துணா்ச்சி பெறச் செய்துள்ளது. புதுவையில் மென்பொருள் நிறுவன மையம் தொடங்க தற்போது ஸோஹோ நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. புதுவையில் திறக்கப்பட்ட மடிக்கணினி தயாரிப்பு நிறுவனம் மூலம் உலகின் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பொய் பேசுவதையே தொழிலாக வைத்துள்ளாா். பிரதமா் ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்காவுடன் செய்துகொண்ட வா்த்தக ஒப்பந்தம் காரணமாக மீனவா்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும். தீங்கு எதுவும் இருக்காது. புதுவை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் மற்றும் திறப்பு நிகழ்வுகளை பிரதமா் விரைவில் நடத்தவுள்ளாா். எனவே, பிரதமா் மற்றும் ரங்கசாமிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஜான்குமாா், புதுவை பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா் பங்கேற்றனா். நெடுங்காடு தொகுதி பொறுப்பாளா் எம். செல்வராஜ் வரவேற்றாா். மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் நன்றி கூறினாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT