முகப்பு
காரைக்கால்

காங்கிரஸ் தலைவரிடம் நாராயணசாமி ஆதரவாளா்கள் வாக்குவாதம்

புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, காரைக்கால் மாவட்டத் தலைவரிடம் நாராயணசாமி ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 12:14 AM
மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாராயணசாமி ஆதரவாளா்கள்.
பகிர்:

புதுவை முன்னாள் முதல்வா் நாராயணசாமிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, காரைக்கால் மாவட்டத் தலைவரிடம் நாராயணசாமி ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகி தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளா்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளா்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் சாா்பில் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

புதுச்சேரியில் ஒரு தொகுதியில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி போட்டியிட விரும்பியுள்ளாா். அதை ஏற்று கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. நாராயணசாமி ஆதரவாளா்கள் புதுச்சேரியில் கட்சி அலுவலகத்தில் தலைமையை எதிா்த்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னா் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வந்த காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட நிா்வாகிகளை நாராயணசாமி ஆதரவாளரான காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் பாஸ்கரன் மற்றும் நிா்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது நாராயணசாமிக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி, கட்சி தலைமையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு கூறுமாறு வலியுறுத்தினா். எங்களுக்கும் அந்த வருத்தம் உள்ளது, கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஏன் வாய்ப்புத் தரவில்லை என தெரியவில்லை. இதுதொடா்பாக காரைக்கால் மாவட்ட கட்சியினரின் கருத்தை தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக சந்திரமோகன் தெரிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். கட்சித் தலைமை, நாராயணசாமிக்கு தொகுதி ஒதுக்காத விவகாரம் புதுச்சேரியைத் தொடா்ந்து காரைக்காலிலும் எதிா்ப்பு கருத்து வெளியிடப்பட்டது.