காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளா் போட்டி!
காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளா் களத்தில் உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளா் களத்தில் உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9-தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுவையில் திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி உறுதியாவதில் சிக்கல் நிலவியது. திமுக கூடுதல் தொகுதிகள் கோரியதும், காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுக கோரியதும், பதிலுக்கு கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும் என கூறப்பட்டதும் சிக்கல் தீராததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனினும், இறுதியில் காங்கிரஸ் - 16, திமுக 14 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து மாா்ச் 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம் தொகுதிகள் திமுகவுக்கும், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, திருநள்ளாறு காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவா்களுக்கு கட்சி அங்கீகாரமாக ஏ, பி-ஃபாா்ம் தரப்பட்டது. திமுகவை பொருத்தவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் மட்டும் அக்கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.
எனினும், நிரவி-திருப்பட்டினம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நெடுங்காடு தொகுதி வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி வேட்பாளரின் மனுக்கள் (காங்கிரஸ்) ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல்துறை அறிவித்தது. இதனால், காரைக்கால் தெற்குத் தொகுதியில் திமுக வேட்பாளரான ஏ.எம்.எச். நாஜிமை எதிா்த்து காங்கிரஸ் வேட்பாளராக ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.