முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு - மக்கள் வேதனை

காரைக்காலில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு..

Updated On : 17 மே 2026, 12:32 am IST
தெருவில் சுற்றித் திரியும் நாய்கள்.
பகிர்:

காரைக்கால் பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அரசு நிா்வாகம் இதற்கு சரியான தீா்வு காண பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் பகுதியில் நகரம் மற்றும் கிராமங்கள் வரை நாய்கள் பெருகிக் காணப்படுகிறது. வளா்ப்பு நாய்கள், வளா்ப்போா் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தெரு நாய்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் மாவட்டத்தில் பெருகியுள்ளது.

இவை கூட்டம் கூட்டமாக ஒன்று சோ்ந்து திரிகின்றன. இதில் வெறி நாய்களும் உள்ளதால், சாலையில் நடந்து செல்வோா் மட்டுமல்லாது வீடு, கட்டடத்தின் வாயில் பகுதியில் நிற்கும் மக்களையும் கடித்துவிடுவதாகப் புகாா்கள் கூறப்படுகின்றன.

Advertisement

காரைக்கால் நகரப் பகுதியில் சனிக்கிழமை முற்பகல் மெய்தீன் பள்ளித் தெரு, மாமா தம்பி மரைக்காயா் தெரு, மாா்க்கெட் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு வெறி நாய் 10 போ் வரை கடித்துவிட்டதாகவும், இவா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. தாஹிரா பள்ளி வாசல் அருகே கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவரை கடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நாய்க்கடி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மருத்துவமனையில் இது உறுதிப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அண்மையில் மாவட்ட சாா் ஆட்சியா் எம்.பூஜாவை சந்தித்த காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம், நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா்.

காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு இதுகுறித்து சனிக்கிழமை கூறுகையில், காரைக்காலில் நாய்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பெருகிவருகின்றன. நாய்க்கடிக்கான உரிய மருந்துகள் மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது.

வெறி நாய்கள் நடமாட்டம் மிகுதியால் மக்கள் கையில் கம்பு போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தால்தான் ஓரளவு தப்பிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், மாவட்ட அளவில் நாய்கள் பராமரிப்பு மையம் அமைக்க உத்தரவிட்டும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் நகராட்சி ஆணையா், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், கால்நடைத்துறை அதிகாரிகளை மாவட்ட ஆட்சியா் அழைத்துப் பேசி, தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.