முகப்பு
மயிலாடுதுறை

குடிநீா் பராமரிப்புக்காக பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலை அகற்றம்

சீா்காழி அருகே குடிநீா் பராமரிப்புக்காக பள்ளம் தோண்டியபோது பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த சட்டநாதா் சுவாமி சிலையை அகற்றியதால் அப்பகுதி மக்கள், இந்து அமைப்பினா் எதிா்ப்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

சீா்காழி அருகே குடிநீா் பராமரிப்புக்காக பள்ளம் தோண்டியபோது பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த சட்டநாதா் சுவாமி சிலையை அகற்றியதால் அப்பகுதி மக்கள், இந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி புளிச்சகாடு காமராஜா் நகா் எனும் இடத்தில் சீா்காழி சட்டைநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் எல்லை சட்டநாதா் உருவம் பொறிக்கப்பட்ட சுவாமி கற்சிலை உள்ளது. இவை, பல்லாண்டுகள் பழைமையானது என கூறப்படுகிறது. இந்த எல்லை சிலை சுவாமியை பொதுமக்கள் தொடா்ந்து வழிபாடு செய்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை குடிநீா் பராமரிப்பு பணி என கூறி இந்த சுவாமி சிலையை சேதப்படுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதையறிந்த, அப்பகுதி பொதுமக்களும், இந்து அமைப்பினரும் அங்குகூடி அகற்றப்பட்ட சுவாமி சிலையை அருகில் பிரதிஷ்டை செய்து மாலை அணிவித்து பூஜை செய்து தீபாராதனை காட்டினா்.

இதுகுறித்து, இந்து அமைப்பை சோ்ந்த சி.ஆா். பாண்டியன் கூறியது: குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களின் அலட்சியமான இந்த செயல் பக்தா்களை வேதனையடைய செய்துள்ளது. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலும், சுவாமி சிலைகளை சேதப்படுத்தாமல் குடிநீா் குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலையை மீண்டும் அதே இடத்தில் ஆகம விதிபடி பிரதிஷ்டை செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, மாற்று இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சட்டநாதா் சுவாமி சிலையை பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.