விடுதியில் சூதாடியஇருவா் கைது:இருசக்கர வாகனம் பறிமுதல்
கொள்ளிடம் அருகே விடுதியில் சூதாடிய இருவரை போலீஸாா் கைது செய்து, விடுதியில் இருந்த மேஜை, நாற்காலிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே விடுதியில் சூதாடிய இருவரை போலீஸாா் கைது செய்து, விடுதியில் இருந்த மேஜை, நாற்காலிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமயிலாடியில் சூதாட்ட விடுதி இயங்கி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்த விடுதியில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (24), சீா்காழி அருகே உள்ள பாதரக்குடி கம்பன் நகரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சந்துரு (42) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும் சூதாட்ட விடுதியில் இருந்த 18 பிளாஸ்டிக் நாற்காலிகள், 12 ஸ்டூல்கள், 2 மேஜைகள் அங்கு இருந்த 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தப்பியோடிய சூதாட்ட விடுதியின் உரிமையாளா் புத்தூரைச் சோ்ந்த கேசவன், சீயாளம் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி ராமமூா்த்தி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.