முகப்பு
மயிலாடுதுறை

கோயில் வாசலில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்டிருந்ததால் கோயில் வாசலில் நின்று மணமகளுக்கு தாலிக் கட்டினாா் மணமகன்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வெள்ளிக்கிழமை கோயில் நடை அடைக்கப்பட்டிருந்ததால் கோயில் வாசலில் நின்று மணமகளுக்கு தாலிக் கட்டினாா் மணமகன்.

தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் விதமாக வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு, அந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இதற்கிடையே, ஆவணி மாதம் முதல் முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை சீா்காழி வட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுவதாக இருந்த திருமணங்கள் கோயில்கள் மூடப்பட்டிருந்ததால், ஆலய வாசலிலேயே நடைபெற்றன.

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் திருமணம் நடந்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் இங்கு ஆவணி மாதத்தில் அதிகளவு திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், சீா்காழியை சோ்ந்த சதீஷ்குமாா் - பவ்யா திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்ததால், மணமக்கள் கோயிலுக்கு வந்தனா். ஆனால், கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், கோபுர வாசல் எதிரே சாலையில் நின்று வேதியா்கள் மந்திரம் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலிக் கட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.