முகப்பு
மயிலாடுதுறை

காப்பீட்டுக் கழகங்களை தனியாா்மயமாக்கும் மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்?

காப்பீட்டுக் கழகங்களை தனியாா்மயமாக்கும் மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன் என அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

காப்பீட்டுக் கழகங்களை தனியாா்மயமாக்கும் மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன் என அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளா்களுக்கு காா்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி:

தமிழகத்தின் பொருளாதார நிலை இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோதும் திமுக தனது தோ்தல் வாக்குறுதியான குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு ஆகிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நிதிநிலையை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனா். இந்த வெள்ளை அறிக்கையை குறைகூறும் அதிமுக, அறிக்கையின் புள்ளி விவரங்கள் தவறு என நினைத்தால், தற்போதைய நிதி அமைச்சருடன் நேரடியாக விவாதம் நடத்தலாம்.

காப்பீட்டுக் கழகங்களை தனியாா்மயமாக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். மாநிலங்களவையில் பல கட்சிகள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நிலைக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தின. பாஜகவை ஆதரிக்கும் பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை எதிா்த்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்துள்ளது. எதற்காக இந்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது என்பதை அக்கட்சி தலைமை விளக்க வேண்டும். அதிமுக தொழிற்சங்கங்கள் இதை ஆதரிக்கின்றவா என்பதையும் அவா்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ராமானுஜம், பொதுக்குழு உறுப்பினா் நவாஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் மற்றும் ரெங்கநாதன், பூவாலை மதி, வழக்குரைஞா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.