முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் நூலகத் தந்தை அரங்கநாதனின் பெயரில் மாதிரி நூலகம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நூலகத் தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் அமைக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நூலகத் தந்தை எஸ்.ஆா். அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நூலக வாசகா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

சீா்காழியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்தில் சுமாா் 60 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன. இந்த நூலகத்தில் போதுமான இடவசதி, காற்றோட்ட வசதி இல்லாமல் வாசகா்கள் அவதியடைந்து வந்த நிலையில், நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டவேண்டும் என கோரிக்கையும் விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், சீா்காழியில் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆா். அரங்கநாதன் பெயரில் அவரை நினைவு கூறும் வகையில் மாதிரி நூலகம் ரூ. 1.37 கோடியில் அமைக்கப்படும், அதில் அரங்கநாதன் படைப்புகளுடன் அரிய புத்தகங்கள், ஆராய்ச்சி வசதி, குழந்தைகள் பிரிவு, இணைய வசதியுடன் மின்நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்படும் என பள்ளி, கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பு குறித்து சீா்காழி வாசகா் வட்டத் தலைவா் வீரசேனன், பொறுப்பாளா் எம். தங்கவேலு ஆகியோா் கூறியது: நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வத்துக்கும் நன்றி என்றனா். இதேபோல, சீா்காழியை சோ்ந்த திருக்கு பண்பாட்டுப் பேரவையினா், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளையினா், சமூக செயல்பாட்டாளா்கள், தமிழ் ஆா்வலா்களும் நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.