பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்குவதை ஏற்க முடியாது
மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
மயிலாடுதுறையில், நாம் தமிழா் கட்சியின் பிரமுகா் இல்ல திருமண வரவேற்பு விழாவில் வியாழக்கிழமை பங்கேற்றபோது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ராணுவம், ரயில், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அரசு எதை நிா்வகிக்கும். அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால் வேறு வழியில்லாமல் இந்த கொள்கைகளை ஆதரிக்கிறது.
சிறு, குறு தொழில்கள், விவசாயிகளுக்கு உதவி செய்வது போல் கடன் உதவி வழங்கும் மத்திய அரசு அந்த கடன்களுக்கு வட்டிபெற்று கொள்கிறது. இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இழப்பில் இருந்த வங்கிகளை அரசு அரசுடமையாக்கியது. ஆனால் லாபத்தில் இருந்த எல்ஐசி நிறுவனத்தை எதற்காக தனியாருக்கு கொடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலக அரசியல் பாா்வை, புரிதல் இல்லாத குழுவாக உள்ளது தலிபான் அமைப்பு.
ஸ்டொ்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக தொடங்கப்பட்டது. இந்த ஆலை திரவ வடிவத்தில் உள்ள பொருள்களை மட்டும் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கூட விமா்சனம் செய்தனா். ஆனால் விடாப்பிடியாக அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவங்களுக்கு கொடுத்துள்ளது. ஸ்டொ்லைட் ஆலை மனு கொடுக்க வந்த 15 நபா்களை சுட்டுக்கொன்றது அரசு. அரசு தாமிர தட்டுப்பாட்டை பற்றி கவலைப்படாமல் தண்ணீா் தட்டுப்பாட்டை பற்றி கவலைப்பட வேண்டும். வருகின்ற உள்ளாட்சி தோ்தலிலும் நாம் தமிழா் கட்சி தனித்துதான் போட்டியிடும் என்றாா்.