சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீகட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினா் போராட்டம்
சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. 15 மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து கொண்டிருப்பதால், அதை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினா் போராடி வருகின்றனா்.
சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. 15 மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து கொண்டிருப்பதால், அதை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினா் போராடி வருகின்றனா்.
சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த 24 வாா்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வா்த்தக நிறுவனங்களில் சேரும் குப்பைகள் சீா்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.
இங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நகரில் சேகரமாகும் குப்பைகள் நகராட்சி கலவை உரக் கிடங்கில் 30 அடி உயரம் வரை மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3. 30 மணி அளவில் ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ வேகமாக பரவி, குப்பைக் கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அனைத்தும் எரியத் தொடங்கியது.
இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியா்கள் சீா்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் ஜோதி தலைமையில் வீரா்கள் சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். குப்பை மலைபோல குவிந்து கிடப்பதால் தீயணைப்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.
தொடா்ந்து, தீயணைப்பு வாகனம், நகராட்சி குடிநீா் வாகனம் மற்றும் நகராட்சி ஊழியா்கள் கூட்டாக சோ்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
குப்பைக் கிடங்கிலிருந்து எழுந்துள்ள தீயால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்கு புகையால் சுவாசப் பிரச்னை, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து போராடி வருகின்றனா். தீயை முற்றிலும் அணைக்க இரண்டு நாட்கள்கூட ஆகலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். குப்பைக் கிடங்கில் இருந்த குப்பைகளுக்கு யாரேனும் தீ வைத்தனரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
சீா்காழி எம்.எல்.ஏ. எம். பன்னீா்செல்வம், நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். மாலை 7 மணி வரை சுமாா் 50 சதவிகிதம் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.